5வது விமானம் டெல்லி வந்தது... 1,156 பேர் தாயகம் திரும்பினர்

5வது விமானம் டெல்லி வந்தது... 1,156 பேர் தாயகம் திரும்பினர்
தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் ANI

ரஷ்யாவில் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்தியர்களுடன் 5வது விமானம் டெல்லி வந்துள்ளது. இதுவரை 1,156 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குடியிருப்பு, மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி எல்லைக்குக்கு இந்திய மாணவர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நேற்று வரை 4 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர். ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து புறப்பட்ட முதல் ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் 219 மாணவர்களுடன் மும்பை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, 2வது விமானம் 250 மாணவர்களுடன் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஹங்கேரி தலைநர் புடாபெஸ்ட் நகரில் இருந்து 240 மாணவர்களுடன் 3வது விமானம் டெல்லிக்கும், புக்கரெஸ்ட்டில் இருந்து 198 மாணவர்களுடன் 4வது விமானம் டெல்லிக்கும் நேற்று வந்தடைந்தன. உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு 5வது விமானம் டெல்லி வந்தது.

ANI

இந்த நிலையில், ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து 249 இந்தியர்கள் இன்று காலை 5வது விமானத்தில் டெல்லி வந்தனர். ருமேனியா, ஹங்கேரியில் இருந்து வந்த 5 விமானங்களில் உக்ரைனில் வசித்த 1,156 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்பு படிக்க சென்ற 16,000 இந்திய மாணவர்கள் போர் காரணமாக அங்கு சிக்கியுள்ளனர். இப்போதும் பல மாணவர்கள், உக்ரைனில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்குகுழிகளில் பதுங்கி இருக்கின்றனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய மாணவர்கள் விசா இன்றி தங்கள் நாட்டு எல்லை வழியாக தாயகம் திரும்ப போலந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனிடையே உக்ரைனில் இருந்து எஞ்சிய இந்தியர்களை மீட்க 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி புக்காரெஸ்டுக்கு 5 விமானங்களும், புடாபெஸ்டுக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in