தமிழகத்தில் தேர்தல் வரும் போதெல்லாம் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தவறாமல் இடம் பெறும் ஒரு வார்த்தை ‘கச்சத்தீவு’. தமிழக மீனவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்தத் தீவு நம் கைவிட்டுப் போய் 49 ஆண்டுகள் முடிந்து, ஜூன் 28-ல் ஐம்பதாவது ஆண்டு தொடங்கப் போகிறது!
தமிழகத்தின் தென்கோடி எல்லையான ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் இருக்கிறது கச்சத்தீவு. ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகை பகுதியாக இருந்து வந்த இந்தத் தீவை திடீரென இலங்கை தங்களுக்கு சொந்தமான தீவு என உரிமை கொண்டாடத் துவங்கியது. தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்து விட்டு ஓய்வு எடுக்கவும், தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்தவும் உரிய இடமாக விளங்கிய கச்சத்தீவு, இந்திய பிரதமர் இந்திரா காந்தி - இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா ஆகியோர் இடையே ஏற்பட்ட உடன்பாட்டினால் நம் கையை விட்டுப் போனது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி 1974-ம் ஆண்டு ஜூன் 28-ல் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய – இலங்கை அரசுகள் ஒரே நேரத்தில் வெளியிட்டன. கச்சத்தீவில் சீனிகுப்பன் என்பவரால் அமைக்கப்பட்ட தேவாலயம் இருக்கிறது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் விழாவில் இருநாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பது இன்று வரை தொடர்கிறது. ஆனாலும் அப்போது இல்லாத கட்டுப்பாடுகள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதல்ல என ஏராளமான ஆவணங்கள் ராமநாதபுரம் மன்னர் வசம் இருந்தன. சென்னை சட்டக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பிரிவின் கருத்தையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை வழங்க இந்திரா முடிவெடுத்தார். இதைத் தடுத்து நிறுத்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனாலும் அதற்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. விளைவு, கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் உடமைகளையும் பறிகொடுத்து வரும் அவலம் தொடர்கிறது.
கடலுக்குச் சென்றால் மீன்பிடித்து விட்டு நிம்மதியாக கரைக்கு திரும்புவோமா என்ற உத்திரவாதம் இல்லாத நிலையிலும், மாற்று தொழிலுக்கான வாய்ப்புகள் இல்லாததால் இலங்கை கடற்படையினரின் இன்னல்களைச் சகித்துக் கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாக் நீரிணை பகுதியில் தமிழகத்தின் 6 மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்தான். அதிலும் குறிப்பாக, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்தான். அதற்குக் காரணம் , ராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பரப்பில் இந்திய கடல் எல்லை பகுதி மிக குறுகியதாக இருப்பதுதான்.
கரையில் இருந்து 3 கடல் மைல் தாண்டி விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றால் அடுத்த 6 கடல் மைல் பரப்பில் பாறைகளே நிறைந்திருக்கும். அதைத் தாண்டி மிச்சம் இருப்பது வெறும் 3 கடல் மைல்கள் மட்டுமே. இந்த 3 கடல் மைல்களுக்குள்ளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளால் மீன்பிடிப்பது என்பது சாத்தியமில்லாததாகி விடுகிறது. எனவேதான் தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த கச்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஏஐடியுசி மீனவர் சங்க மாநில செயலாளர் செந்தில்வேல், ‘’1974-ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை அப்போது ஆண்டவர்கள் இதற்கு எதிராக வலுவாகக் குரல் எழுப்பவில்லை என்ற குறைபாடு ஒருபுறம் இருந்தாலும் ஒரு நாட்டின் நிலப்பகுதியை மற்றொரு நாட்டிற்குத் தானம் செய்ய ஒன்றிய அரசுக்கு அன்று ஏற்பட்ட நிர்ப்பந்தம் தான் என்ன? அன்றைய பிரதமர் இந்திரா அம்மையார் இதற்கு வெளிப்படையான எந்தக் காரணத்தையும் கூறாமலே கச்சத்தீவை இலங்கையிடம் கொடுத்துவிட்டார்.
1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. ’பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்’ என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தாகிய போது 1958 -ம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.
‘கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையைப் பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது. இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்தத்தில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின்பற்றப்படவில்லை. ராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல். சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்பதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்தத்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது.
கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம் தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958-ம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி - பண்டாரநாயகா ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்படவில்லை.
50 ஆண்டுகளாக இந்திய - இலங்கை - பன்னாட்டுக் கடல்பகுதியில் தொடரும் மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினையை முன்வைத்து இதுவரை 360 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான இந்தியப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை இலங்கை அரசு மறுத்து வருவதுடன், தொடர்ந்து இத்தீவை தங்களுடைய ராணுவ முகாமாக மாற்றுவதற்கும், சீன ராணுவ தளமாக உருவாக்கி இந்தியாவை மிரட்டுவதற்கும் பயன்படுத்தி வருகிறது. மேலும், இந்திய மீனவர்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பதிலாக புத்த கோயில்களை கட்டுவதன் மூலம் கச்சத்தீவின் மீது நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தொடர்புகளையும் துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில், மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இது தமிழக மக்களுக்கும் மீனவர்களுக்கும் செய்கிற துரோகமாகும்.
மத்தியில் ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே கொள்கை ரீதியில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் மிக மிக தாமதமாகத் தான் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தன. இதில் ஜெயலலிதா, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
2021-ல் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இந்தியா அரசுகளின் 23.3.1976 அன்றைய கடிதப் போக்குவரத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டுமென 5.8.2021-ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இப்படி அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது, அல்லது கடிதங்கள் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளைத்தான் செய்து வருகின்றன. உச்சநீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கி வருகிறது. ஆனால், கச்சத்தீவு தொடர்பான வழக்கை தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மேலும், இது உச்ச நீதிமன்றத்தால் தீர்வு காணும் பிரச்சினை அல்ல. வெளிநாட்டு கொள்கையில் நம்நாட்டு நீதிமன்றங்கள் எந்த அளவு தலையிட முடியும் என்பது நமக்குத் தெரியும். எனவே, இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில், ஒருதலைபட்சமாக கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது செல்லாது என அறிவித்து அதற்கான சர்வதேச சபையை நாடி ராஜ்ய ரீதியில் தீர்வு கண்டு கட்சதீவை மீட்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் மாநிலத்தை ஆளும் கட்சிகளும் செய்வதில்லை. மத்தியில் ஆளும் கட்சிகளும் செய்வதில்லை. இதே நிலை நீடித்தால் நூற்றாண்டு கடந்தாலும் கச்சத்தீவு என்பது நம் மீனவர்களின் கண்ணீர் தீவாகத்தான் இருக்கும்” என்றார்.
தேர்தல் அறிக்கை புத்தகத்தில் எண்ணிக்கைக்காக சேர்க்கும் வாக்குறுதியாக இல்லாமல் கச்சத்தீவை மீட்க மாநிலத்தை ஆளும் அரசும் மத்தியில் ஆளும் அரசும் ஆக்கபூர்வமான நடவடிக்கை களை கச்சத்தீவை தாரை வார்த்த இந்த ஐம்பதாம் ஆண்டிலாவது எடுக்கட்டும்!