
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தவர் ஆதிக்கத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
மத்திய அரசு துறைகள், உயர் கல்வித் துறைகள், நீதிமன்றங்களில் உயர்சமூகத்தினர் ஆதிக்கம் மற்றும் தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’வட மாநிலத்தில் இருந்து கூலி வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு துறைகளில் உள்ள வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோம். ஐஐடி போன்ற உயிர்களின் நிறுவனங்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உயர்சமூகத்தினர் மட்டுமே இருக்கின்றனர்'' என குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.