முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கத் தயங்குகிறேன்: காரணம் சொல்லும் நளினி

முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கத் தயங்குகிறேன்: காரணம் சொல்லும் நளினி

முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கப் பயமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது எனச் சிறையிலிருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நளினி, முருகன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கெனவே பேரறிவாளன் விடுதலை அடைந்த நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நளினி, “எனக்கும், என் கணவர் முருகனுக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது. எங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் 32 வருடம் இந்தியாவில் இருந்திருக்கிறோம். நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம். ஆனால் அவரை முகாமிற்கு அனுப்பி இருக்கிறார்கள். பாஸ்போர்ட் எடுக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறோம்.

எங்களுடைய மகன், அப்பாவைப் பார்க்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறான். நான் சிறையிலிருந்தாலும் மனதளவில் குழந்தைகளையும், கணவரையும்தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். அவர்களுடன் வாழ்ந்த மாதிரி ஓர் உணர்வு இருக்கிறது. நிஜத்தில் அது நடக்க இருக்கிறது. எங்களுக்காக உயிர் கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தைச் சந்திக்க வேண்டும். கலாம் ஐயாவின் சமாதிக்கு செல்ல வேண்டும். நாங்கள் சிறை சென்ற போதிலிருந்தே விடுதலையாவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் நிறைய அடிமேல் அடிவிழுந்தது. நான் என் வாழ்க்கையையே முடித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அளவிற்கு சிறைக்குள் சம்பவங்கள் நடந்திருக்கிறது. முதல் முதலாக எனக்கு மட்டும்தான் தூக்குத் தண்டனை ரத்தானது. அதனால் எனக்கு அப்போது சந்தோஷம் இல்லை.

பேரறிவாளன் முதல்வரைச் சந்தித்த போது கடுமையான விமர்சனம் எழுந்தது. அதனால், முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க பயமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது. எங்களை வைத்து அவரை சிக்கலில் மாட்டிவிடக்கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கத் தயங்குகிறேன். ராகுல் காந்தி அவர் அப்பாவை இழந்துவிட்டார். அந்த வழக்கில் நாங்கள் சிறை சென்றுள்ளோம். அவர்கள் மிகுந்த வலியில் இருப்பார்கள். அதனால் அவர்களைச் சந்திக்கவும் நாங்கள் தயங்குகிறோம். அவர்கள் விருப்பப்பட்டால் நாங்கள் சந்திப்போம். என்னைப் பிரியங்கா காந்தி சிறையில் சந்தித்த போது மிகுந்த வருத்தத்துடன்தான் இருந்தார். இத்தனை வருடங்கள் ஆனபிறகும் அவரின் மனக்காயங்கள் ஆறவில்லை எனத் தோன்றியது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் ” என்றார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in