
தஞ்சாவூரில் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே கூத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மனைவி ராஜேஸ்வரி (65). இவரது கணவர் முருகையன் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு தஞ்சாவூர் மங்களபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் வெள்ளைச்சாமி (37), கரந்தையைச் சேர்ந்த மின் வாரியத்தின் மின் பாதை ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட 4 மகன்கள், மகள் உள்ளனர்.
இந்நிலையில், குடும்ப பிரச்சினை தொடர்பாக தனது மகன்கள் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியாவிடம் ராஜேஸ்வரி புகார் செய்தார். இந்த மனு வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இதன் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரான அய்யம்பேட்டை லிங்கத்தடிமேடு பகுதியைச் சேர்ந்த கே.மகேந்திரன் (52) வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வெள்ளைச்சாமியிடம் மகேந்திரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெள்ளைச்சாமி, தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, ஆய்வாளர் பத்மாவதி உள்ளிட்டோர் வழக்குப் பதிந்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது காவல் நிலையத்திற்கு வந்த வெள்ளைச்சாமி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை மகேந்திரனிடம் அளித்தார். அங்கு மறைந்திருந்து ஊழல் தடுப்பு காவல் துறையினர் மகேந்திரனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ரூ. 3,250 ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.