
தெற்காசியாவின் பிரபல சுற்றுலா தலமான தாய்லாந்து, சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தாய்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிபாத் இன்று வெளியிட்டார்.
தாய்லாந்தின் பாங்காங் உட்பட பிரசித்தி பெற்ற தலங்களில், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான ஏராளமான வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை, சுவையான அசைவ உணவுகள், மசாஜ் பார்லர்கள் உள்ளிட்டவற்றில் தொடங்கி சுற்றுலா பயணிகளை சுண்டி இழுப்பதில் தாய்லாந்து முன்னணி வகிக்கிறது.
கரோனா காலத்தில் முடங்கிக் கிடந்த சுற்றுலா பயணிகளின் வரத்து மீண்டும் இயல்புக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து, சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது முதல் விபத்துக்குள்ளாகும் சுற்றுலா பயணிகளுக்கான உதவிகள் வரை பல்வேறு தேவைகளுக்காக, புதிய முடிவுகளை அண்மையில் தாய்லாந்து அமைச்சரவை நிறைவேற்றியது.
அவற்றில் ஒன்றாக சுற்றுலா பயணிகளுக்கு தலா 300 பாத் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்க மதிப்பில் சுமார் 9 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் சுமார் ரூ.733 ஆகும். தாய்லாந்து தேசத்தை பொறுத்தவரை சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் முக்கியமானதாகும். கரோனா காலத்துக்கு முன்பு வரை நாட்டின் ஜிடிபியில் 12% சுற்றுலாவே பங்கு வகித்தது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நடப்பாண்டு இரண்டரை கோடியை எட்டும் என எதிர்பார்க்கிறது தாய்லாந்து. இதுவே கரோனாவுக்கு முந்தைய 2019-ம் ஆண்டில் சுமார் 4 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கைக்கு தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் வருகை உயரும்போது, புதிய கட்டண விதிப்பின் மூலம் கணிசமாக வருவாய் உயரும் என தாய்லாந்து நம்புகிறது.
பணிக்கான உரிமத்தோடு தாய்லாந்து வருபவர்களுக்கு இந்த சுற்றுலா கட்டண விதிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.