தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் ஏராளமானோர் இன்று புனித நீராடினர்.

சர்வதேச பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோரை வழிபடுவது வழக்கம். இன்று (ஜன.21) தை அமாவாசையையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் நேற்று மதியத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் குவியத் தொடங்கினர்.

அக்னி தீர்த்த கடலில் அதிகாலையில் புனித நீராடிய பக்தர்கள் பித்ருக்களுக்கு பிண்டம், எள் வைத்து தர்ப்பணம் செய்து, முன்னோருக்கு பூஜைகள் செய்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 21 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். 

கூட்ட நெரிசல் மிகுதியால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கோயிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலான இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் நிலவிய கூட்ட நெரிசலைத் தடுக்க, இம்முறை போக்குவரத்து மாற்று வழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 தை அமாவாசை நாளான இன்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை  அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, அதைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை உள்ளிட்ட கால பூஜைகள் நடந்தன.

நண்பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனைக்கு பின், இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் புறப்பாடு நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in