உதயசூரியன் அல்லது திரிசூலம்: உத்தவ் தாக்கரே அணிக்கு என்ன சின்னம்?

உதயசூரியன் அல்லது திரிசூலம்: உத்தவ் தாக்கரே அணிக்கு என்ன சின்னம்?

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கும் தற்காலிகமாகப் புதிய பெயர் மற்றும் சின்னம் வழங்கப்படவிருக்கின்றன. இந்நிலையில், உத்தவ் தாக்கரே அணிக்கு உதயசூரியன் அல்லது திரிசூலம் சின்னம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவுடன் இணைந்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசைக் கவிழ்த்தனர். பின்னர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார். பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த அரசியல் சதுரங்கத்தைத் தொடர்ந்து, எது உண்மையான சிவசேனா எனும் கேள்வி எழுந்தது.

சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேயும் மகனும் அவரது அரசியல் வாரிசுமான உத்தவ் தாக்கரே, தனது தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறிவருகிறார். ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை ஏற்படுத்தியதன் மூலம், பால் தாக்கரே பின்பற்றிய இந்துத்துவக் கொள்கைக்கு விரோதமாக உத்தவ் தாக்கரே நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டிவரும் ஏக்நாத் ஷிண்டே, தனது தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா எனக் கூறிவருகிறார். இதுதொடர்பாக, இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கின்றனர்.

இதற்கிடையே, மும்பையின் அந்தேரி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட இரு அணிகளுக்கும் தற்காலிகமாகப் புதிய பெயர்கள் மற்றும் சின்னங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இரு தரப்பும் தங்களுக்கு விருப்பமான பெயர்களைப் பரிந்துரைக்கலாம் என்றும், சின்னங்களைத் தேர்வு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இரு தரப்பும் கட்சியை உரிமை கொண்டாடினாலும், சட்டப்பேரவையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பிலும் இரு தரப்புக்கும் எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது முக்கியமான கேள்வி. இதுதொடர்பாக, தங்களிடம் உள்ள சான்றுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் இரு தரப்புக்கும் உத்தரவிட்டிருந்தது.

உத்தவ் தாக்கரே அணி கேட்டுக்கொண்டதை அடுத்து, அக்டோபர் 7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் ஆணையத்தை அணுகிய ஏக்நாத் ஷிண்டே அணி, கட்சியின் அசல் சின்னமான ‘வில் மற்றும் அம்பு’ சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியது. அந்தச் சின்னத்தில் அந்தேரி கிழக்கு தொகுதியில் தங்கள் அணி வேட்பாளர் போட்டியிட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கிவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இரு தரப்பும் தற்காலிகமாகத் தங்களுக்கு விருப்பமான பெயர்கள் மற்றும் சின்னங்களைத் தெரிவிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக இன்று மதியம் 12 மணிக்கு உத்தவ் தாக்கரே அணி கூடி விவாதித்தது. இதைத் தொடர்ந்து, ‘சிவசேனா பால் தாக்கரே’ எனும் பெயரைக் கட்சியின் பெயராக முதன்மைத் தெரிவாக உத்தவ் தாக்கரே அணி முன்வைத்திருக்கிறது. இரண்டாவது தெரிவாக ‘சிவசேனா உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே’ எனும் பெயரையும் முன்வைத்திருக்கிறது.

கட்சி சின்னமாக, உத்தவ் தாக்கரே அணியின் முதல் தெரிவு திரிசூலம். இரண்டாவதாக, உதயசூரியன் சின்னத்தை அந்த அணி குறிப்பிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் வாள் மற்றும் கேடயம், தென்னைமரம், ரயில் இன்ஜின், கோப்பை மற்றும் தட்டு என வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டுவந்த சிவசேனா, 1989 முதல் வில் மற்றும் அம்பு சின்னத்தைத்தான் பயன்படுத்திவருகிறது.

அந்தச் சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், தற்காலிகமாகப் புதிய சின்னத்தை நாட வேண்டிய நிலையில் உத்தவ் தாக்கரே அணி இருக்கிறது.

இதற்கிடையே, இன்று மாலை 7 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே அணித் தலைவர்கள் கூடி இதுகுறித்து விவாதிக்கவிருக்கின்றனர். தற்காலிகமாக அவர்கள் என்ன பெயரையும் சின்னத்தையும் முன்வைப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in