
மும்பை குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம் உள்ளிட்ட பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி தவ்ஃபிக் காவல்துறையினரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் (எ) அக்பரை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி போல் நடித்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் அக்பர் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தெரிந்து கொண்ட கும்பல் ஒன்று என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து 3 கோடி பணத்தை பறித்து தப்பி சென்றனர். இந்த வழக்கில் பயங்கரவாதி தவ்ஃபிக்கின் மனைவி சல்மா மற்றும் வலதுகரமாக செயல்பட்ட கட்டை காதர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி தவ்ஃபிக்கை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தவ்ஃபிக் பல ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் சென்னை போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பயங்கரவாதி தவ்ஃபிக்கை தேடி வந்தனர். இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாதி தவ்ஃபிக்கை நேற்று வடக்கு கடற்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து சென்னை வந்த தவ்ஃபிக்கை விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் கடத்தலுக்கு பிறகு மூன்று கோடி ரூபாய் பணத்துடன் வங்கதேசத்துக்கு சென்று தலைமறைவானது தெரியவந்தது.
மேலும் ஒவ்வொரு முறையும் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக வாழ்வதையே தவ்ஃபிக் வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கையில் உள்ள பணம் தீர்ந்த பிறகு தவ்ஃபிக் மீண்டும் பண தேவைக்காக கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் கடத்தல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த தவ்ஃபிக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் சென்னை வந்த போது போலீஸில் சிக்கினார். கைதான தவ்ஃபீக் மீது இந்தியா முழுவதும் 14க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக 2002 முதல் 2008 வரை பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தவ்ஃபிக் போலீஸாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
2002-ல் மும்பையில் நடந்த பேருந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய தவ்ஃபிக் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் நொய்டாவில் கைது செய்யப்பட்டு 2015-ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த தவ்ஃபிக் தமிழகத்தில் தங்கி நாம் மனிதர் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார்.
இறைவன் ஒருவனே மற்றும் இஸ்லாமிய தற்காப்பு படை போன்ற அமைப்பு உருவாக்கி தீவிரவாத கும்பலுக்கு ஆள்சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டதால் இவன் மீது தேசிய புலனாய்வு முகமை அமைப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தீவிரவாத அமைப்பிற்கு உதவியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பயங்கரவாதி தவ்ஃபிக்கிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.