தீவிரவாதம் எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் மனிதகுலத்திற்கு எதிரானது - பிரதமர் மோடி!

தீவிரவாதம் எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் மனிதகுலத்திற்கு எதிரானது - பிரதமர் மோடி!

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 9-வது உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள யசோபூமியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "பி20 உச்சி மாநாடு உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற நடைமுறைகளின் மகாகும்ப மேளாவைப் போன்றது. இந்தியா நிலவில் தரையிறங்கி உள்ளது. அதேபோல், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று பி20 உச்சி மாநாடு தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைச் சேர்ந்த மக்களின் சக்திதான் இந்த மாநாட்டிற்கு மிக முக்கிய காரணம். 9வது பி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்று. இந்தியா ஜனநாயகத்தின் தாய். அதோடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயகம். விவாதிப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஏற்ற இடமாக உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றங்கள் திகழ்கின்றன” என்றார்

மேலும், “இந்தியாவில் நாடாளுமன்ற நடைமுறை தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 17 பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. உலகின் மிகப் பெரிய தேர்தலை இந்தியா நடத்துகிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதன்மூலம் வெளிப்படையானதாகவும், திறன் நிறைந்ததாகவும் தேர்தல்கள் மாறி இருக்கின்றன. வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான அந்தத் தேர்தலை பார்க்க நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

தீவிரவாதம் எந்த வடிவத்தில் எங்கு நடந்தாலும் அல்லது எந்தக் காரணத்திற்காக இருந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது. பயங்கரவாத அமைப்புகள் மாற்றுப் பாதையை சிந்திக்க வேண்டும். பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் அமைதி மற்றும் வளர்ச்சியைப் பற்றி யோசித்து மனித குலம் முன்னேற ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பூமிக்கும், மனித நேயத்திற்கும் பயங்கரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக, எவ்வாறு ஒருங்கிணைந்து போராடுவது என்பது குறித்து உலகில் உள்ள பார்லிமென்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நோக்கில் உலகத்தை பார்க்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in