அவசர சட்டங்களும் அமலாக்கத்துறையின் அடுத்த இயக்குநரும்: ‘பிரம்மாஸ்திர’த்தின் பின்னணி

சஞ்சய் குமார் மிஸ்ரா
சஞ்சய் குமார் மிஸ்ரா

மத்திய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் பதவி காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே, அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாஜக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பிரம்மாஸ்திரமாக விளங்குகிறது அமலாக்கத்துறை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிபிஐ ஏவல் சர்ச்சைகளுக்கு ஆளானதுபோல, பாஜக காலத்தில் அமலாக்கத்துறை பெயர் பெற்றிருக்கிறது. விஷேச அதிகாரங்களுடன் கூர் தீட்டப்பட்ட அமலாக்கத்துறை, எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அதீதமாக கடமையாற்றி வருகிறது. சொத்துக்கள், முதலீடுகள், பணப்பரிமாற்றங்கள் என அரசியல்வாதிகளின் பற்கள் பிடுங்கப்படுவதும் அல்லது அப்படியான அச்சுறுத்தலுக்கு அவர்கள் ஆளாவதும் தொடர்ந்தது.

நாட்டுக்கு நலம் பயக்கும் பல்வேறு நடவடிக்கைகளுடன், பாஜகவுக்கு பலம் சேர்க்கும் வகையிலும் அமலாக்கத்துறை செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. அமலாக்கத்துறையை வைத்து அச்சுறுத்துவதாக சிவ சேனா தலைமையேற்றிருந்த மகாராஷ்டிர மாநிலத்தின் உத்தவ் தாக்கரே அரசு, மேற்கு வங்கத்தின் மம்தாப் பானர்ஜி அரசு ஆகியவற்றின் ஆட்சி மற்றும் கட்சி பிரமுகர்கள் குமுறினார்கள். காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, தேசியவாத காங்கிரச் கட்சியின் சரத் பவார், அஜித் பவார், அனில் தேஷ்முக், நவாப் மாலிக் என நாட்டின் முக்கிய எதிர்கட்சி தலைவர்கள், கடந்த 2 ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை என்ற அஸ்திரத்தின் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகளின் குதிரை பேரங்கள் சாத்தியமானதாகவும் புகார்கள் தொடர்கின்றன. எதிர்க்கட்சி கருப்பு பண முதலைகள் வீடுகளிலிருந்து கோடிகளில் கரன்சி கற்றைகளும், கட்டிகளில் தங்கமும் கைப்பற்றப்பட்டன. அரசியல் தலைவர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறடிக்கப்பட்டனர். கைதுகள் மற்றும் சிறைவாசமும் தொடர்கின்றன. பொழுது விடிந்தால் எந்த திசையில் அமலாக்கத்துறை பாயும் என்பது, வானிலை அறிவிப்புக்கு இணையாக அன்றாட செய்திகளில் இடம்பிடித்தது.

விசேஷ அதிகாரங்கள் பூண்ட அமலாக்கத்துறையின் இயக்குநராக 2018ல் சஞ்செய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இரு ஆண்டுகளுக்கு அவர் பதவியில் இருப்பார் என்ற 2018 உத்தரவு, 2020ல் 3 ஆண்டுகள் என திருத்தப்பட்டது. இதன் மூலம் அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த பதவி காலத்தின் முடிவில், 2021 நவம்பரில் இரண்டாவது முறையாக மேலும் ஓராண்டுக்கு அமலாக்கத்துறையின் இயக்குநராக சஞ்செய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு கண்டார்.

தற்போது 2022 நவம்பரில் அவரது பணிக்காலம் முடிவடைய இருப்பதை அடுத்து, 3வது நீட்டிப்பை அவசர சட்டம் ஒன்றின் வாயிலாக மத்திய அரசு சாத்தியமாக்கி இருக்கிறது. சில தினங்கள் முன்பாக பிறப்பிக்கப்பட்ட இந்த அவசர சட்டத்தின்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைகளின் இயக்குநர்கள் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்றிருந்ததை 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டன. சிபிஐ இயக்குநரின் பதவி காலத்தை வரையறுக்கும் டெல்லி சிறப்பு போலீஸ் நிர்வாக சட்டத்திலும், அமலாக்கத்துறை இயக்கு நரின் பதவி காலத்தை வரையறுக்கும் மத்திய ஊழல் ஆணைய சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டதன் மூலம் அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த அவசர சட்டங்களின்படி இரு புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர்கள் பணிக்காலத்தை மென்மேலும் ஓராண்டுகளுக்கு நீட்டிக்க இயலும். நீட்டிப்புக்கு உரிய காரணத்தை எழுத்து மூலமாக பதிவு செய்தால் போதும். ஆனால் புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர்கள் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நீட்டிக்க முடியாது.

முன்னதாக சஞ்சய் மிஸ்ராவுக்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்ததோடு, அரிதான மற்றும் அசாதாரண சூழல்கள் தவிர்த்து இந்த புலனாய்வு இயக்குநர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு அறிவுறுத்தலும் விடுத்தனர்.

தற்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்று(நவ.18) நிறைவடைய உள்ள நிலையில், சில தினங்கள் முன்பாக அவசர சட்டம் கொண்டு வந்ததோடு, மிஸ்ராவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து நேற்றிரவு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அடுத்தாண்டு நவ.18 வரையிலான பதவி நீட்டிப்புக்கு புதிய உத்தரவு வழி செய்கிறது.

அதிகபட்சம் 5 ஆண்டுகள் என்ற கால வரையறைக்குள் மற்றுமொரு முறை சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. இந்த கால அவகாசத்தில் 2024 மக்களவை தேர்தலும் ஆட்பட்டிருக்கும். அந்த வகையில் எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜக அரசின் பிரதான அஸ்திரங்களில் ஒன்றாக அமலாக்கத்துறை ஏவலுக்கு தயார் நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in