கொடைக்கானல் மலை முகட்டில் அதிகரிக்கும் கூடாரங்கள்: இடம் பெயரும் வரையாடுகள்!

வரையாடுகள்
வரையாடுகள்

கொடைக்கானல் மலைமுகடுகளை ஒட்டிய வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் நிலங்களில் அனுமதியின்றி அதிகரித்து வரும் கூடாரங்களால் பாதிக்கப்படும் வரையாடுகள் இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை தடுக்க வேண்டும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் இந்தியாவின் பசுமை பொக்கிஷமாக திகழ்வது மேற்கு தொடர்ச்சி மலை. பல்லாயிரக்கணக்கான வன உயிரினங்களின் உயிர் ஆதாரமாக இருப்பது இந்த மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைத்தொடரின் முக்கிய பகுதியாக திகழ்வது கொடைக்கானல். இதன் மேல்மலை பகுதியான கிளாவரை, போலார், குண்டுப்பட்டி உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளிலும், மலைச்சரிவுகளிலும் ஆயிரக்கணக்கான வரையாடுகள் காணப்பட்டன.

இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் அனுமதியின்றி அதிகரித்து வரும் கூடாரங்களில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரத்தினாலும், இரவு நேரங்களில் எழுப்பும் அதிகப்படியான ஓசைகளாலும் வரையாடுகள் வாழ்வியல் சூழலை இழந்துள்ளன. மேலும் இங்கு தங்கும் சுற்றுலாப் பயணிகள் விட்டுசெல்லும் காலி மது பாட்டில்கள், குப்பைகள் போன்றவற்றாலும், புல்வெளி பகுதி அருகி வருவதாலும் இரை தேடி செல்லும் வரையாடுகளுக்கு இன்னல் நேரிடுகிறது.

இந்த சூழலை தவிர்க்க நினைக்கும் வரையாடுகள் தற்போது கேரள வனப்பகுதியான டாப் ஸ்டேஷன் மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. இதனால் மாநில விலங்கினமான வரையாடுவின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனை தடுக்க கொடைக்கானல் மேல்மலை பகுதியில் புல்வெளிகளை அதிகரிக்கவும், அனுமதியின்றி அதிகரித்து வரும் தனியார் கூடாரங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in