பஸ்சில் மதுபாட்டில் சோதனையில் கத்தை, கத்தையாக சிக்கிய பணம்: கேரளாவில் சிக்கிய தென்காசி வாலிபர்

பஸ்சில் மதுபாட்டில் சோதனையில் கத்தை, கத்தையாக சிக்கிய பணம்: கேரளாவில் சிக்கிய தென்காசி வாலிபர்

தென்காசி வாலிபர் 27 லட்சம் பணத்துடன் ஓடும் பேருந்தில் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்னும் சந்தேகத்தின் பேரில் கேரள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று இரவு அரசுப்பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து ஆரியங்காவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கேரள மதுவிலக்குப் போலீஸார் அதை நிறுத்தி, சாராயபாட்டில்கள் மொத்தமாகக் கொண்டு செல்லப்படுகிறதா எனச் சோதனை செய்தனர்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒரு வாலிபர் தன் பையை மறைப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு போலீஸார் அந்த பையை வாங்கிச் சோதனை செய்தனர். அப்போது அதில் 500 ரூபாய் தாள்களாக 27 லட்ச ரூபாய் பணம் இருந்தது.

போலீஸார் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த முகமது அக்ரம் எனத் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது அவர், கேரளாவில் நகைகள் வாங்க 27 லட்சத்தையும் கொண்டு செல்வதாகச் சொன்னார். ஆனால் முகமது அக்ரத்திடம் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு போலீஸார் முகமது அக்ரமையும், அவரிடம் கைப்பற்றிய 27 லட்ச ரூபாய் பணத்தையும் திருமலை சட்டம், ஒழுங்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

உரிய ஆவணங்கள் இன்றி முகமது அக்ரம் கொண்டு சென்ற 27 லட்சம் ரூபாய் ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்னும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in