`இதே பள்ளியில் படித்து நிச்சயம் பெரிய ஆளாவேன் ஐயா'- முதல்வருக்கு சிறுமி நன்றியுடன் நெகிழ்ச்சி கடிதம்

`இதே பள்ளியில் படித்து நிச்சயம் பெரிய ஆளாவேன் ஐயா'- முதல்வருக்கு சிறுமி நன்றியுடன் நெகிழ்ச்சி கடிதம்

முதல்வர் ஸ்டாலினுக்கு தென்காசி மாணவி நன்றி கடிதம் எழுதியுள்ளார். "நீங்க சொன்ன மாதிரி இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாவேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சிறுமி ஆராதனா.

தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் போதுமான கட்டிடங்கள் இல்லை. மேலும், மாணவ, மாணவிகள் விளையாட இட வசதியும் இல்லை. இதையடுத்து அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆராதனா, எங்கள் பள்ளிக்கு கட்டிடங்கள் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து, அந்த சிறுமியின் கடிதம் குறித்து பேசினார். தொடர்ந்து, சிறுமி ஆராதனா கோரிக்கை ஏற்று, அந்த பள்ளிக்கு முதற்கட்டமாக சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு பள்ளி கட்டிடங்கள் கட்டி தர உத்தரவிட்டார். மாணவியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தநிலையில், தனது கோரிக்கையை ஏற்று பள்ளி கட்டிடம் கட்ட உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறுமி ஆராதனா மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "நான் அனுப்புன மனுவை ஏற்றுக்கொண்டு எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே பள்ளியில் படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க ஐயா. நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா.

எங்க அம்மா, அப்பா, ஊர் மக்கள், என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோச பட்டாங்க ஐயா. உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா!” என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in