தென்காசி இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்தென்காசி இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி. ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து வினீத்திடம் இருந்து பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி செல்வது போன்ற சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தும் விசாரித்து வந்தனர். தனிப்படைகள் அமைத்தும் கிருத்திகாவை தேடிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் குஜராத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினர் மேத்ரிக் பட்டேல் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது. கிருத்திகா பேசுவது போன்ற ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில், தன் விருப்பப்படியே பெற்றோர் உடன் சென்றிருப்பதாக கிருத்திகா தெரிவித்திருந்தார்.

பின்னர், கிருத்திகாவும், வினீத்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. பின்னர், கிருத்திகா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், வினீத்தின் குடும்பத்தார் தன்னை வைத்து தன் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதைத் தெரிந்து கொண்டு தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தேன். தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும், அதனால் தான் பெற்றோர் தன்னை அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார். இவ்வாறு நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் இந்த விவகாரம் தொடர்ந்து வந்தது.இந்த சம்பவத்தில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்,1 காவலர் உள்ளிட்டோரும் ஏ.ஆர் க்கு மாற்றப்பட்டனர். டி.ஜி.பி.இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் சூழலும் உருவானது.

இதனிடையே, தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வினீத் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே உயர் நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு கிருத்திகாவை தென்காசி காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.

திருமண புகைப்படங்களைக் காட்டி கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். கிருத்திகா கடத்தப்பட்டதில் இரு வேறு கதைகள் உள்ளன. உண்மையை கண்டறிய சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

தொடர் விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி பிப்ரவரி 13-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in