திருமணங்களுக்கு நன்கொடை வசூலித்தால் கோயில் நிர்வாகம் ரசீது கொடுக்கணும்: உயர்நீதிமன்றம்

திருமணங்களுக்கு நன்கொடை வசூலித்தால் கோயில் நிர்வாகம் ரசீது கொடுக்கணும்: உயர்நீதிமன்றம்

கோயிலில் நடைபெறும் திருமணங்களுக்கு கட்டணம், நன்கொடை வசூலித்தால் நிர்வாகம் கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போலி இணையங்கள் தொடர்பாக தாக்கலான மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''தமிழகத்தில் மாவட்டம் தோறும் பிரசித்த பெற்ற கோயில்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பெயரில் செயல்படுத்தப்படும் இணையங்களை முறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். கோயில்கள் பெயரில் போலி இணையம் உருவாக்கி மோசடி செய்யும் இணையங்களை முடக்க வேண்டும்.

போலி இணையங்களை செயல்படுத்துவோர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி இணையங்கள் மூலம் வசூலித்த தொகையை பறிமுதல் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கோயில்களின் இணைய முகவரிகளை தெரியப்படுத்த வேண்டும்.

இத்தகைய இணையங்கள் மூலம் பூஜைகள், நன்கொடை உள்ளிட்டவைகளை செயல்படுத்த வேண்டும். கோயில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு கட்டணம், நன்கொடை வசூலித்தால் நிர்வாகம் கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். கோயில் அர்ச்சகர்கள், வழிகாட்டிகள், அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். இணையம் தொடர்பாக புகாரளிக்க தனி அலுவலர் நியமிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in