ஆங்கிலம் தெரியாததால் இருக்கை மாற்றி அமர வைக்கப்பட்ட பெண்மணி: இண்டிகோவுக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்

ஆங்கிலம் தெரியாததால் இருக்கை மாற்றி அமர வைக்கப்பட்ட பெண்மணி: இண்டிகோவுக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்

தெலங்கு மொழி பேசும் பெண் ஒருவர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் இண்டிகோ விமானத்தில் அவர் புக் செய்திருந்த இருக்கையிலிருந்து வேறு இருக்கைக்கு மாற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அகமதாபாதில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர் தேவஸ்மிதா சக்கரவர்த்தி. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் பயணித்தார். அப்போது அந்த விமானத்தில் ஒரு பெண்மணியிடம் விமான சிப்பந்தி ஒருவர், ‘பாதுகாப்பு பிரச்சினை’ எனும் காரணத்தைச் சொல்லி, அவர் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து வேறு ஒரு இருக்கைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

அதைக் கவனித்த தேவஸ்மிதா சக்கரவர்த்தி, அது குறித்து சமூகவலைதளத்தில் எழுதிய பதிவு வைரலானது. ‘2ஏ (எக்ஸெல் சீட், வெளியேறும் வழியில் இருக்கும் வரிசை) இருக்கையில் அந்தப் பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் 3சி இருக்கையில் மாறி அமர்ந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஏனெனில், அவருக்கு தெலுங்கு தவிர ஆங்கிலமோ இந்தியோ புரியவில்லை. விமான சிப்பந்தி அவரிடம் ‘பாதுகாப்புப் பிரச்சினை’ என்று காரணம் சொன்னார்’ என அந்தப் பதிவில் எழுதியிருந்த அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும் வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்ல, ஆந்திராவிலிருந்து தெலங்கானா செல்லும் அந்த விமானத்தில் தெலுங்கில் அறிவிப்புகள் எதுவும் சொல்லப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனது தொடர் பதிவுகளில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை டேக் செய்த அவர், ’பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் ஆங்கிலம் / இந்தியில் மட்டுமல்ல. அனைத்து மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இது பாதுகாப்பு, மாண்பு, அனைவரையும் சமமாக நடத்துவது தொடர்பான விஷயம். நீங்கள் இவற்றைச் சரிசெய்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றது.

இதையடுத்து, ட்விட்டரில் இண்டிகோ விமான நிறுவன மேலாண்மைப் பிரிவை டேக் செய்த கே.டி.ராமராவ், ‘உள்ளூர் மொழிகளை மதிக்கத் தொடங்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் ஆங்கிலம் அல்லது இந்தியில் சரளமாகப் பேச முடியாத பயணிகளையும் மதிக்கத் தொடங்குங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதேபோல் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in