ரயில் நிலையம்
ரயில் நிலையம்

தெலங்கானா - கேரளா சிறப்பு ரயில் தமிழகம் வழியாகச் செல்லும்: பயணிகள் மகிழ்ச்சி!

தெலங்கானா, கேரளா இடையே புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது தமிழகம் வழியாகச் செல்லும் என்பதால் தமிழக ரயில் பயணிகளுக்கும் இது நல்வாய்ப்பாக அமையும்.

தெலங்கானா - கேரளா இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவைகள் குறித்து ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஐதராபாத் - கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் இருந்து வரும் 29-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது 31-ம் தேதி அதிகாலை 3.50க்கு கோட்டயம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் 31-ம் தேதி இரவு 10.50க்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் ரயிலானது, மறுநாள் இரவு 9.15க்கு ஐதராபாத் சென்றுசேரும்.

நர்சாபூரில் இருந்துவரும் 27 -ம் தேதி கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 27 -ம் தேதி காலை 11.10க்கு புறப்படும் சிறப்பு ரயில், கேரள மாநிலம் கண்ணூருக்கு 28-ம் தேதி மாலை 05.15க்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில் கண்ணூரில் இருந்து 28-ம் தேதி இரவு 10.55க்கு புறப்படும் ரயிலானது, 30-ம் காலை 6 மணிக்கு நர்சாபூர் சென்று சேரும். இதேபோல் ஜெகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 28-ம் தேதி ஜெகந்திராபாத்தில் இருந்து 1.30க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7 மணிக்கு கொல்லம் சென்று அடையும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து 29-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, 31-ம் தேதி அதிகாலை 4.50க்கு ஜெகந்திராபாத் செல்லும்.

இதேபோல் நர்சாபூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு 31-ம் தேதி, மாலை 4.20க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு கண்ணூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தமிழகம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்துமே காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in