‘தலைவர்தான் பெயர் சூட்டவேண்டும்’ - 9 வயது சிறுமிக்கு பெயர் வைத்தார் சந்திரசேகர் ராவ்!

‘தலைவர்தான் பெயர் சூட்டவேண்டும்’ - 9 வயது சிறுமிக்கு பெயர் வைத்தார் சந்திரசேகர் ராவ்!

இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயர் வைக்கப்படாத தெலுங்கானாவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று பெயர் சூட்டினார்.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் பூபாலபள்ளி மண்டலத்தின் நந்திகாமா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அனிதா ஆகியோர் தெலுங்கானா இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள். இவர்களுக்கு 2013-ல் மகள் பிறந்தபோது, ​​குழந்தைக்கு கேசிஆர்தான் பெயர் வைக்க வேண்டும் என விரும்பினர். அந்த ஆசை ஒன்பது ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. தற்போது ஐந்தாம் வகுப்பு படித்துவரும் சிறுமி, பிறந்தபோது தற்காலிகமாக வைக்கப்பட்ட ‘சிட்டி’ என்ற பெயருடனே இருந்தார்.

இந்த சூழலில் தெலங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டசபை சபாநாயகருமான மதுசூதனா சாரிக்கு, சமீபத்தில் இந்த தகவல் தெரிய வந்தது. பின்னர் அவர் அந்த தம்பதியையும், குழந்தையையும் தெலுங்கானா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்து வந்தார்.

இத்தகவலை கேள்விப்பட்ட தெலங்கானா முதல்வர் கேசிஆர், சுரேஷ் மற்றும் அனிதாவை வாழ்த்தி, அவர்களது ஒன்பது வயது குழந்தைக்கு 'மஹதி' என்று பெயர் சூட்டினர். மேலும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தை மஹதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரின் கல்விக்கான நிதியுதவியையும் அறிவித்தனர்.

தலைவர்தான் பெயர்சூட்ட வேண்டும் என்று காத்திருந்த தம்பதிகளின் செயலும், தகவல் தெரிந்தவுடன் அதனை நிறைவேற்றிய சந்திரசேகர் ராவின் செயலும் தெலங்கானாவில் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in