
தேர்தல் பிரச்சாரத்தின் போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்மாநிலத்தில் நடைபெறும் தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் மீண்டும் 3வது முறை ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் இழந்த செல்வாக்கை மீட்க, இம்முறை ஆட்சியை பிடித்தே தீருவது என களத்தில் இறங்கியுள்ளது. இதனால், பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தின் கட்வால் மாவட்டத்தில் உள்ள இட்டிக்யால் என்ற இடத்தில் கவிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மக்களிடையே பேசிக்கொண்டிருந்த போது, கவிதா திடீரென மயக்க மடைந்து கீழே விழுந்தார். இதனால் பதறிய கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். நீர்சத்து குறைபாடு காரணமாக கவிதா மயக்க மடைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். கவிதா உடல்நிலை சரியானதை அடுத்து, சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பிரச்சாரம் தொடங்கியது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து, கவிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண் குழந்தையுடன் பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், சிறிது பயத்தை ஏற்படுத்திவிட்டதற்காக மனிக்கவும், நான் தற்போது நலமாக உள்ளேன். இந்த குட்டி பெண்ணை சந்தித்து, நேரம் செலவழித்ததன் மூலம் உற்சாகமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.