விரும்பிய பெண்ணையே மணமுடிக்கும் லாலு மகன் தேஜஸ்வீ யாதவ்!

நாளை டெல்லியில் நிச்சயதார்த்தம்
விரும்பிய பெண்ணையே மணமுடிக்கும் லாலு மகன் தேஜஸ்வீ யாதவ்!
மகன் தேஜஸ்வியுடன் லாலு...

லாலு பிரசாத் யாதவின் மகனும் பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ், தான் சிறுவயது முதல் விரும்பிய பெண்ணை மணமுடிகிறார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் ரகசியமாக செய்யப்பட்டு வருகின்றன.

பிஹாரின் முன்னாள் முதல்வர்களான லாலு - ராப்ரி தேவி தம்பதிக்கு ஏழு மகள்கள், இரண்டு மகன்கள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள். இதில், இளையவரான தேஜஸ்வீ, தன் தந்தையை போல் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். லாலுவும் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை விட இளைய மகன் தேஜஸ்வீயையே தனது அரசியல் வாரிசாக முன்நிறுத்தி வருகிறார். மூத்த மகள் மிசாபாரதி மாநிலங்களவை எம்பி-யாக இருக்கிறார்.

லாலுவின் புதல்வர்கள் இருவருக்குள்ளும் மனஸ்தாபங்கள் நீடித்து வரும் நிலையில், இளைவர் தேஜஸ்வீயின் திருமண ஏற்பாடுகள் துவங்கி உள்ளது. லாலுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மிசாபாரதி
மிசாபாரதிSANDEEP_SAXENA

தேஜஸ்வீக்கு பெண் கொடுக்கவும் அவரை மணமுடிக்கவும் பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து பலரும் போட்டிபோட்டனர். ஆனால், தனது தந்தைக்கு ஜாமீன் கிடைத்து அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தால் மட்டுமே மண முடிப்பதாகக் கூறி வந்தார் தேஜஸ்வீ.

கால்நடை தீவன வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட லாலு, ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்த வழக்கில் இப்போது ஜாமீனில் இருக்கிறார் லாலு.

லாலு
லாலு

இந்த நிலையில், மகனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தேஜஸ்வீ யாதவ், மகள் மிசாபாரதியுடன் பாட்னாவிலிருந்து இன்று காலை டெல்லி வந்துள்ளார் லாலு. டெல்லியில் நாளை வியாழக்கிமை தேஜஸ்வீக்கு திருமண நிச்சயதார்த்தம் நிகழ உள்ளது. இருப்பினும் ஏதோ சில காரணங்களால் இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் ரகசியமாகவே செய்துவருகிறார்கள்.

தேஜஸ்வீ மணமுடிக்கவிருக்கும் பெண் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. தேஜஸ்வீக்கு சிறுவயதிலிருந்தே நன்கு பரிச்சயமான இந்தப் பெண்ணின் குடும்பம் இப்போது டெல்லியில் வசிக்கின்றனர். இந்தப் பெண்ணை தேஜஸ்வீ நீண்ட நாட்களாக விரும்பி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் லாலு குடும்பத்தினருடன் குறிப்பிட்ட சில அரசியல் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே திருமணத்தையும் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள்.

லாலு தனது மகள்களுக்கு பெரும்பாலும் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களிலேயே சம்பந்தம் முடித்திருக்கிறார். முதல் முறையாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்து தனது அரசியல் வாரிசான மகன் தேஜஸ்வீக்கு பெண் எடுக்கிறார். அதேபோல் லாலு குடும்பத்தில் ஜாதி விட்டு ஜாதி நடக்கும் முதல் கலப்பு திருமணமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராப்ரி தேவியுடன் தேஜஸ்வீ யாதவ்...
ராப்ரி தேவியுடன் தேஜஸ்வீ யாதவ்...

32 வயதான தேஜஸ்வீ சிறுவயது முதல் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டியவர். இவரை தேசிய விளையாட்டு வீரராக்க லாலு மிகவும் முயன்றார். தற்போது பிஹாரின் எதிர்கட்சித் தலைவராக உள்ள தேஜஸ்வீ, கடந்த ஆட்சியில் துணை முதல்வராகவும் இருந்தார். அப்போது மாநில நெடுஞ்சாலை துறையையும் தன் பொறுப்பில் வைத்திருந்தவர், பிஹாரின் பழுதடைந்த சாலைகள் குறித்த புகாரை தனக்கு பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்க வாட்ஸ் - அப் எண் ஒன்றை அறிவித்தார். அந்த எண்ணுக்கு சாலைகள் பற்றிய புகார் மனுக்களைவிட தேஜஸ்வீயை மணமுடிக்க விரும்புவதாக வந்த விருப்ப மனுக்களே அதிகம். அப்போது வந்திருந்த 47 ஆயிரம் வாட்ஸ் - அப் பதிவுகளில் 44 ஆயிரம் பதிவுகள் இளம்பெண்கள் தங்களது படங்களுடன் அனுப்பி இருந்த திருமண விருப்ப பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in