பூட்டப்பட்ட அறையில் இருந்து கசிந்த புகை; தீக்காயங்களுடன் துடித்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை: நள்ளிரவில் நடந்தது என்ன?

பூட்டப்பட்ட அறையில் இருந்து கசிந்த புகை; தீக்காயங்களுடன் துடித்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை:  நள்ளிரவில் நடந்தது என்ன?

ஏ.சி வெடித்து தீப்பிடித்ததில் வாலிபர் ஒருவர், தந்தை கண் முன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் மணவாளன் தெருவைச் சேர்ந்தவர் ஷ்யாம்(28). இவர் அதே பகுதியில் ஆவின் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆடி மாதம் என்பதால் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால், ஷ்யாம் வீட்டின் கீழ் தளத்தில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ஷ்யாம் வீட்டின் படுக்கையறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடிச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கேட்டு மேல் தளத்தில் வசித்து வந்த ஷ்யாமின் தந்தை பிரபாகரன் வந்து பார்த்தார். அப்போது ஷ்யாம் இருந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன பிரபாகரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, ஏ.சி வெடித்து சிதறியதில் ஷ்யாம் உடல் கருகி இறந்து கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் மயங்கினார்.

ஷ்யாம்.
ஷ்யாம்.

தகவல் அறிந்து வந்த திருவிக நகர் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். பின்னர் ஷ்யாமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து திருவிக நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ஷ்யாம் கதவுகளைப் பூட்டிக்கொண்டு தூங்கச் சென்றதும், பின்னர் ஏ.சி இயந்திரம் வெடித்து சிதறியதில் தீவிபத்து ஏற்பட்டு படுக்கையறை முழுவதும் பரவியதும் தெரிய வந்தது. இதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஷ்யாம் தீயில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in