
கோவையில் பிரதமர் நிதி திட்டத்தில் பணம் வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் 4 பவுன் தங்க நகைகளை பறித்து பேப்பரில் கல்லை சுற்றி கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சுங்கம் பைபாஸ் ரோடு கேபி நகரை சேர்ந்தவர் சுசீலா(70). இவர் லங்கா கார்னர் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன், அதற்கு உங்களை போட்டோ எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அருகே உள்ள ஸ்டுடியோவுக்கு செல்லலாம் என கூறி அந்த நபர் மூதாட்டியை தாமஸ் தெரு அருகே அழைத்து சென்றுள்ளார். பின்னர் போட்டோ எடுக்கும் போது அதிகளவில் நகையை போட்டிருந்தால் உங்களுக்கு பிரதமர் நிதி திட்டத்தில் பணம் கிடைக்காது என கூறி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் 1 பவுன் தங்க கம்மலை கழற்றி அந்த நபர் வாங்கி கொண்டார்.
பின்னர் அதனை ஒரு பேப்பரில் சுற்றி மூதாட்டியிடம் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் வந்து விடுகிறேன் என கூறி அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகத்தின் பேரில், மூதாட்டி அவர் நகையை சுற்றி கொடுத்த பேப்பரை பார்த்த போது அதில் நகைகளுக்கு பதிலாக சிறிய கற்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து கோவை வெறைட்டிஹால் ரோடு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.