
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லக்குடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அணில்குமார். கட்டுமானத் தொழிலாளியான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கரோனா காலக்கட்டத்தில் ஊருக்கு வந்தவர் மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லவில்லை. உள்ளூரிலேயே கட்டுமான வேலைசெய்து வந்த அணில்குமார், குழித்துறைப் பகுதியில் தன் அம்மாவோடு தங்கியிருந்தார்.
அணில்குமாருக்கு அவரது தாய் பல இடங்களிலும் வரன் தேடினார். ஆனால் அவருக்கு எந்த வரனும் பொருந்திப் போகவில்லை. இதனால் திருமணம் தடைபட்டுக்கொண்டே சென்றது. இதனால் அணில்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற அணில்குமார் இன்று காலையில் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார், அறையை உடைத்துப் பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அணில்குமார் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை களியக்காவிளை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.