கிரைம் சீரியல்களைப் பார்த்து கணவனைக் கொலை செய்த இளம்பெண்: காதலனுடன் கைது

கிரைம் சீரியல்களைப் பார்த்து  கணவனைக் கொலை செய்த இளம்பெண்: காதலனுடன் கைது

சொத்துக்களை அபகரிப்பதற்காக நிறைய கிரைம் சீரியல்களைப் பார்த்து கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாணப்பூர் சிவ்லி பகுதியைச் சேர்ந்தவர் ரிஷப் திவாரி(29). இவர் மனைவி சப்னா. கடந்த நவ. 27-ம் தேதி தனது நண்பர் மனீஷுடன் சகர்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு ரிஷப் திவாரி சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரிஷப் திவாரி மீது அடையாளம் தெரியாத மர்மநபர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயமடைந்த ரிஷப் திவாரி, ஸ்வரூப் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவ சிகிச்சையில் உடல் நலன் பெற்று டிச.1-ம் தேதி ரிஷப் திவாரி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் டிச.3-ம் தேதி ரிஷப் திவாரியின் உடல்நலன் திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதன் பின் ரிஷப் திவாரி இறந்தது குறித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. ரிஷப் ஏற்கெனவே தாக்கப்பட்ட நாளான்று அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமான செல்போன் எண்களின் பேச்சுக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து கிருஷ்ணாநகரைச் சேர்ந்த ராஜூ குப்தாவிற்கு அடிக்கடி ஒருவர் செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து ராஜூ குப்தாவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது ரிஷப் மனைவி சப்னாவுடன் அவர் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது ராஜூ குப்தாவிற்கும், சப்னாவிற்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரிய வந்தது. ரிஷப் திவாரியின் சொத்துக்களை அடைய வேண்டும் என்பதற்காக இவர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிட்டு என்பவரை ஏற்பாடு செய்துள்ளனர். நவ.27-ம் தேதி அவரை வைத்து நடத்திய தாக்குதலில் இருந்து ரிஷப் தப்பியுள்ளார்.

இதனால் ரிஷப்பிற்கு வீட்டில் அதிக மாத்திரைகளைக் கொடுத்து சப்னா கொலை செய்தது தெரிய வந்தது. இதற்காக அவர் நிறைய கிரைம் சிரியல்களைப் பார்த்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சப்னா, ராஜூ குப்தா, சிட்டு ஆகியோரை நேற்று கைது செய்த போலீஸார், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக கணவனை காதலுடன் சேர்ந்து பெண் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in