வாகனச்சோதனையில் எஸ்கேப்பான வாலிபர்: தவறவிட்ட பையில் இருந்த பொருட்களால் பதறிப்போன போலீஸார்

வாகனச்சோதனையில் எஸ்கேப்பான வாலிபர்: தவறவிட்ட பையில் இருந்த பொருட்களால் பதறிப்போன போலீஸார்

சென்னையில் வாகனச்சோதனையில் தப்பியோடிய வாலிபர் தவற விட்ட பையில் இருந்த பொருட்களால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை போலீஸார் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் தட்டி விட்டு தப்பிச் சென்றனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பை ஒன்று அறுந்து கீழே விழுந்தது.

அந்தப் பையில் செல்போனுக்கு ஒட்டும் டெம்பர் கிளாஸ் மற்றும் ஒரு நோட்டு இருந்தது. அந்த நோட்டில் இஸ்லாமிய மொழியில் எழுதப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார், உடனே காசிமேடு சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு இருசக்கர வாகன எண்ணை அனுப்பி உஷார்படுத்தினர்..

இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய மூவரையும் காசிமேடு சிக்னலில் வைத்து போக்குவரத்து போலீஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் மூவரையும் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், தண்டையார்பேட்டை புது வினோபா நகரை சேர்ந்த ஜாகிர் உசேன்(20), நவாஸ் (19) மற்றும் நாகூர் மீரான் (22) என்பது தெரியவந்தது.

அவர்கள் மூன்று பேரும் பர்மா பஜாரில் உள்ள பிளாட்பார்மில் செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டும் தொழிலை செய்து வந்ததும் கைப்பற்றிய நோட்டு புத்தகம் நாகூர் மீரானுக்கு சொந்தமானது என்பதும், நாகூர்மீரான் இந்தியன் நேஷனல் லீக் அமைப்பில் உறுப்பினராக இருந்து வருவதும் தெரியவந்தது.மேலும் நாகூர்மீரான் முஸ்லீம் தலைவர்களின் பேச்சுக்களை நோட்டில் எழுதி வைத்திருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் தண்டையார்ப்பேட்டை பட்டேல் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களது வீட்டில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நாகூர் மீரான் மீது பொதுமக்களுக்கு அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவினருக்கும் பயம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல், இரு வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு உருவாக்கும் அறிக்கைகள், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ராயபுரம் போலீஸார் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.. மற்ற இரண்டு பேரிடமும் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in