
நள்ளிரவில் காதலியைச் சந்திக்க பீட்சா வாங்கிக் கொண்டுச் சென்ற இளைஞன், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். காதலியின் தந்தை வந்ததால் தப்பி செல்ல முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள போரபண்டா பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான சோயப், இவர் ஞாயிற்றுகிழமை நள்ளிரவில் பீட்சாவுடன் தனது காதலியை சந்திக்க அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருந்தார். அப்போது, அந்தப் பெண்ணின் தந்தை படிக்கட்டுகளில் ஏறி வரும் சத்தத்தைக் கேட்டு இருவரும் பதற்றமானார்கள். திடுக்கிட்டுப்போன சோயப், அங்கிருந்த கம்பிகளை பிடித்துக் கொண்டு, கூரையின் விளிம்பிற்கு சென்ற போது தவறி விழுந்தார்.
கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சோயப் உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர். அதிகாலை 3 மணியளவில் மாடியிலிருந்து விழுந்த சோயப், உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அதிகாலை 5:30 மணியளவில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உயிரிழந்த சோயப்பின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.