
கோவையில் திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்சினையால் இளம்பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த வாலிபர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியைச் சேர்ந்தவர் சித்ரா ( 35). இவர் கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் திருமணம் செய்யாமல் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சித்ராவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த மதுரைவீரன் (37) என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இதேபோல் கடந்த 29-ம் தேதி சின்னதடாகத்தில் உள்ள வீட்டில் சித்ராவும், மதுரை வீரனும் தனிமையில் இருந்தனர்.
அப்போது சித்ரா ஏற்கெனவே ஒரு வாலிபருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருப்பது மதுரைவீரனுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கத்திரிக்கோலால் சித்ராவின் கழுத்து, வாய், வயிறு உள்ளிட்ட பல இடங்களில் மதுரைவீரன் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சித்ரா உயிரிழந்தார். பின்னர் மதுரை வீரன் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குச் சென்று விட்டார். எப்படியும் போலீஸில் மாட்டி விடுவோம் என்ற பயத்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் மதுரைவீரன் இன்று சரண் அடைந்தார்.
அவர் அளித்த தகவலின் படி, திண்டுக்கல் போலீஸார், கோவை தடாகம் போலீஸாரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ வீட்டுக்குச் சென்று படுகொலை செய்யப்பட்ட சித்ராவின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து மதுரைவீரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.