வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்: விசாரணையின் பின்னணியில் அதிர்ச்சி தகவல்

வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்: விசாரணையின் பின்னணியில் அதிர்ச்சி தகவல்

கடலூரில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடலூர் மாவட்டம், ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எலி என்ற கிருஷ்ணமூர்த்தி(28). இவர் நேற்று வீட்டு வாசலில் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீஸார் கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது பழிக்குப்பழியாக கிருஷ்ணமூர்த்தி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர் முதுநகரைச் சேர்ந்த 18 வயது பாலிடெக்னிக் மாணவர் கடந்த 2020 மார்ச் 4-ம் தேதி காணாமல் போனார். அவருடன் கடைசியாக செல்போனில் பேசிய விஜய், பிரபாகரனை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது ஒரு பெண்ணுடன் பழகுவது தொடர்பான பிரச்சினையில் அந்த மாணவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்து உப்பனாற்றில் உடலைப்புதைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொலையில் ஏழாவது குற்றவாளியாக எலி என்ற கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்குப் பழிவாங்க தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்களிடம் முதுநகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in