காதலனைப் பார்க்கப் பாகிஸ்தானுக்குப் போறேன்... பெற்றோருக்குத் தெரியாமல் விமான நிலையத்திற்கு சென்ற இந்திய மாணவி!

இன்ஸ்டாகிராம் காதல்
இன்ஸ்டாகிராம் காதல்

‘பாகிஸ்தான் போக வேண்டும்’ என ஜெய்பூர் விமான நிலையத்தில் நச்சரித்த சிறுமியை, விமான நிலைய அதிகாரிகள் போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இந்த களேபரம் நிகழ்ந்துள்ளது. ‘பாகிஸ்தானுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க’ என பதின்ம வயது சிறுமி ஒருவர் டிக்கெட் கவுண்டர் முன்பாக ஆக்கிரமித்திருந்தார். பெற்றோர் அல்லது பெரியவர்கள் யாரும் துணை இல்லாமல் தனியாக தென்பட்ட சிறுமியிடம் ஏதோ தடுமாற்றம் தென்படவே, டிக்கெட் வழங்கும் பொறுப்பில் இருந்த விமான நிலைய அதிகாரி சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.

’உடனடியாக பாகிஸ்தான் செல்ல வேண்டும். அங்குள்ள தனது இன்ஸ்டாகிராம் பாய்பிரண்டை சந்திக்க வேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நின்றாள் அந்த சிறுமி. சர்வதேச விமானப் பயணத்துக்கான சிறப்பு ஆவணங்கள் மட்டுமன்றி, அடிப்படைத் தேவையான பாஸ்போர்ட், விசா போன்றவை கூட அந்த சிறுமியிடம் இல்லை.

ஜெய்ப்பூரில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானம் இல்லை என்பதும் அந்த சிறுமிக்கு புரியவில்லை. உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வசம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்டார். அங்கே இன்னொரு கதையை அந்த சிறுமி எடுத்து விட்டார். ’3 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும், தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பச் செல்வதாகவும்’ சிறுமி தெரிவிக்க, அசந்து போன பாதுகாப்பு அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தந்தனர்.

நேரில் போலீஸ் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த சிறுமியிடமிருந்து உண்மை வெளியில் வந்தது. ’அஸ்லாம் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் நண்பனை சந்திக்கவே விமான நிலையம் வந்திருப்பதாகவும், அதிகாரிகள் விசாரித்தால் வேறு கதைகளை பேசி ஏமாற்ற நண்பனுடன் ஏற்கனவே ஒத்திகை பார்த்துள்ளதாகவும்’ சிறுமி தெரிவித்தார். மேலும் விசாரணையில் அந்த சிறுமி சிகார் மாவட்டம் ரத்தன்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வரவே, போலீஸார் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதே ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அஞ்சு என்ற மணமான பெண், தனது கணவனையும், குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனைக் காண பாகிஸ்தான் சென்று அங்கு மதம் மாறி அவரையே மணந்திருக்கிறார். நடப்பு வாரத்தின் தலைப்புச் செய்திகளில் ஒன்றான இந்த அஞ்சுவின் கதையால் ஈர்க்கப்பட்ட ரத்தன்புரா சிறுமி, பாகிஸ்தானைச் சேர்ந்த தனது இன்ஸ்டாகிராம் நண்பனை சந்திக்க ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்து பிடிபட்டிருக்கிறார். நேற்று முன் தினம், சீனாவில் இருந்து இளம்பெண் ஒருவர், பாகிஸ்தானுக்கு சென்று காதலனைத் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் வளர்ப்பு மற்றும் அவர்களது சமூக ஊடக ஈடுபாடு ஆகியவற்றில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது என்பதை, சக பெற்றோர்களுக்கு புரிய வைத்திருக்கிறது இந்த ஜெய்ப்பூர் சம்பவம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in