
ஹைதராபாத்தில் சாலையில் மாரடைப்பால் மயங்கி விழுந்த வாலிபருக்கு பணியில் இருந்து போக்குவரத்து காவலர் ஒருவர், உயிர் மீட்பு சுவாசம் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பேருந்தில் இருந்து ராஜேந்தர் நகரில் இன்று இறங்கினார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் சரிந்து விழுந்தார். அப்போது அந்த பகுதியில் ராஜேந்தர் நகர் காவல்நிலைய எல்லையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர் ராஜ்சேகர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்.
பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்சேகர், அந்த வாலிபருக்கு சிபிஆர் எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கினார். தனது இரண்டு கைகளையும் கொண்டு மாரடைப்பால் மயங்கி விழுந்த வாலிபரின் நெஞ்சில் அழுத்தி சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.
ஆனால், மூர்ச்சையாகி கிடந்த வாலிபர் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனாலும், மனம் தளராது தனது இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து வாலிபரின் மார்பில் தொடர்ந்து அழுத்தி அவருக்கு உயிர் மீட்பு சுவாசம் கிடைக்க ராஜ்சேகர் முயற்சி செய்தார். சிறிது நேரத்தில் அந்த வாலிபருக்கு லேசான மூச்சு விட்டார். இதனால் மீண்டும் அவருக்கு உயிர் மீட்பு சுவாசப்பணியை மேற்கொண்டு சாவில் இருந்து ராஜ்சேகர் காப்பாற்றினார்.
இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரித்த போது, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாரடைப்பால் சரிந்து விழுந்த வாலிபருக்கு போக்குவரத்து காவலர் ராஜ்சேகர், முதலுதவி அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி காவல் துறையினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.