சென்னையில் கண்ணீர் ஊர்வலம்: கால்பந்து, சீருடையுடன் மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம்

சென்னையில் கண்ணீர் ஊர்வலம்: கால்பந்து, சீருடையுடன்  மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம்

மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த கால்பந்தாட்ட மாணவி பிரியா உடல் சென்னையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கால்பந்து மற்றும் சீருடையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்து . விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரியா, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த பிரியா, அங்கு கால்பந்து பயிற்சியும் பெற்று வந்தார். இதனிடையே, பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்து.

பிரியா.
பிரியா.

இதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரியா சேர்க்கப்பட்டார். அவருக்கு தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். ஆனாலும் அவருக்கு காலில் வலி குறையவில்லை. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக்குழுவினர் மாணவிக்கு பரிசோதனை செய்தனர். அப்போது, காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறினர். இதைக் கேட்டு பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பின்னர், மகளைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, மாணவியின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனிடையே, "மருத்துவர்களின் அலட்சியப் போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்கக் காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு உள்ள காயம் சரியானதும் பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும் மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடல்

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு மாணவியின் உடல் எடுத்து செல்லப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு பொதுமக்கள், கால்பந்தாட்ட வீராங்கனைகள், மாணவர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு மாணவி பிரியாவின் உடல் வியாசர்பாடியில் இருந்து கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் கலந்து கொண்டனர். கல்லறைத் தோட்டத்தில் கால்பந்து, விளையாட்டு சீருடை, வளையல் ஆகியவை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பணியிடை நீக்கம்

முன்னதாக, மாணவி பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சோமசுந்தரம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in