
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் ஐபி போர்டுகளுடன் இணைக்கப்பட்டவை உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் குஜராத்தி மொழியைக் கற்பிப்பதைக் கட்டாயமாக்கும் மசோதாவை குஜராத் சட்டசபை இன்று ஒருமனதாக நிறைவேற்றியது.
குஜராத் மாநில கல்வி அமைச்சர் குபேர்பாய் டின்டோரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா 182 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குஜராத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் இம்மசோதாவை ஆதரித்தன.
இந்த மசோதாவின்படி, தற்போது குஜராத்தி கற்பிக்காத பள்ளிகள், வரும் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு குஜராத்தியை கூடுதல் மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும். "குஜராத் கட்டாயக் கற்பித்தல் மற்றும் குஜராத்தி மொழி கற்றல் மசோதா - 2023" ன் விதிகளை ஒரு பள்ளி ஒரு வருடத்திற்கும் மேலாக மீறுவதாகக் கண்டறியப்பட்டால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, ஒரு பள்ளி முதன்முறையாக விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அடுத்தடுத்த மீறல்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய கல்வி அமைச்சர் டிண்டோர், "ஒவ்வொரு பள்ளியும் குஜராத்தியை கூடுதல் மொழியாகக் கற்பிப்பதற்காக குஜராத் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும். இந்த மசோதாவின் விதிகளைச் செயல்படுத்த கல்வித் துறையின் ஒரு துணை இயக்குநர் நிலை அதிகாரியை மாநில அரசு நியமிக்கும்" என்று கூறினார்.
குஜராத்தி தாய்மொழி விவகாரத்தில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ போன்ற பிற வாரியங்களுடன் இணைந்த பள்ளிகள் மாநில அரசின் கொள்கையை அமல்படுத்த மறுக்க முடியாது என்று டிசம்பரில் உயர்நீதிமன்றம் கூறியது. பள்ளிகளை கட்டாயப்படுத்த முடியவில்லை என்று அரசு உணர்ந்தால் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுவதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.