100 மாணவர்களுக்கு 1 லட்ச ரூபாயில் புத்தகங்கள்: நெகிழ வைத்த ஆசிரியர்கள்

புத்தகங்களுடன் மாணவர்கள்
புத்தகங்களுடன் மாணவர்கள் 100 மாணவர்களுக்கு 1 லட்ச ரூபாயில் புத்தகங்கள்: நெகிழ வைத்த ஆசிரியர்கள்

திருவாரூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள்  100 பேருக்கு  தலா ரூ.1000 வழங்கி புத்தகங்கள் வாங்கிக் கொள்ள வைத்த  அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மார்ச் 25-ம் தேதி முதல் ஏப். 2-ம் தேதி வரை 9 நாட்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வருகிறது. 

இந்த புத்தகக் கண்காட்சியில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை திருவாரூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு வரவழைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு மஞ்சள் பையும்,  மற்றும் ரூ.1000/- பணமும் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சம் ரூபாயில் மாணவர்களின் விருப்பங்களுக்கேற்ப  புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். 

மாணவர்களுக்கு பணம் வழங்கப் படுகிறது
மாணவர்களுக்கு பணம் வழங்கப் படுகிறது

இதற்கான ரூ.1 லட்சம் நிதியினை முத்துப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த அன்பாசிரியர் செல்வசிதம்பரம்  அவரது ட்விட்டர் நண்பர்கள் மூலமாக திரட்டி இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதுகுறித்து ஆசிரியர் செல்வசிதம்பரம் கூறுகையில், "இன்றைய சூழலில், குழந்தைகள் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகி விட்டனர். இந்த காலகட்டத்தில் புத்தக வாசித்தல் என்பது நிச்சயமாக குழந்தைகளிடம் பழக்கப்படுத்த வேண்டிய ஒரு செயல். 

புத்தகம் குழந்தைகளை ஒரு புதிய உலகத்திற்குள் பயணிக்க வைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 100 பேரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, 10 மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி ஆசிரியர் என 10 ஆசிரியர்கள் செயல்பட்டனர். 100 மாணவர்களும் நோட்டு பேனாவோடு வருகை தரச்சொல்லி இருந்தோம். 

முதலில் மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியரோடு ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பிடித்த புத்தகங்கள் பெயர், விலை, ஸ்டால் எண் குறித்துக்கொள்ள வேண்டும். பின்பு தான் குறித்து வைத்துள்ள புத்தகங்களில் 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைத் தேர்வு செய்து எழுதிக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாணவர்கள் கையிலும் 1000 ரூபாய் தரப்பட்டது. அடுத்த சுற்று வழிகாட்டி ஆசிரியரின் உதவியோடு புத்தகங்களை வாங்கிக் கொண்டனர். 

மொத்தமாக ஓரிடத்தில் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு பிரித்து தந்துவிடலாம்தான்.  ஆனால், அந்த புத்தகத்தின் மதிப்பு மற்றும் வாசித்தல் நேரடி கள அனுபவம் போன்றவற்றை மாணவர்கள் கற்க வேண்டியே இந்த செயல்பாடு மிக சிரத்தையோடு எடுக்கப்பட்டது" என்றார். 

ஆசிரியர்களின்  இந்த  அற்புதமான புது முயற்சி அகிலமெங்கும்  பரவ வேண்டிய ஒரு முன்னுதாரணமான செயலாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in