ஒருபக்கம் இலவச சிற்றுண்டி; மறுபக்கம் பருவத்தேர்வு என்ற பெயரில் பணம் வசூல்: முதல்வர் ஸ்டாலின் தலையிடுவாரா?

ஒருபக்கம் இலவச சிற்றுண்டி; மறுபக்கம் பருவத்தேர்வு என்ற பெயரில் பணம் வசூல்: முதல்வர் ஸ்டாலின் தலையிடுவாரா?

தமிழகத்தில்  பள்ளிகளில் காலை சிற்றுண்டியும் விலையில்லாமல் வழங்கும் நிலையில், 4 முதல் 8-ம் வகுப்புகளுக்கு முதல் பருவத் தேர்வில் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4-ம் மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு முதல் பருவ தேர்வுகளுக்கு தொகுத்தறி மதிப்பீட்டு வினாக்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்டு குறுந்தகடு வழியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். அதனை பள்ளிகளுக்கு வழங்கி தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இதுவரை இல்லாத புதிய நடைமுறை பின்பற்றப்படுவது ஏனென்று தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர். தற்போது வினாத்தாள் கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ.15 வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. அதனுடன் கூடுதல் இணைப்பாக 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் ஒரு மாணவருக்கு ரூ.30 என ஒரே நேரத்தில் மூன்று பருவத்திற்கும் ரூ.90 வசூலித்து வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன்

கட்டணம் முன்கூட்டியே செலுத்தியபிறகு தினந்தோறும் காலை 8.30 மணிக்கு வட்டாரக்கல்வி அலுவலகத்திற்கு ஆசிரியர்கள் நேரில் வந்து வினாத்தாள் பெற்றுச்செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வினாத்தாள்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தால் லாப நோக்கில் அச்சிட்டு வழங்கப்படுகிறது என தெரிகிறது. இதுவரை ஆசிரியர்கள் தாங்களாகவே விடைத்தாளுடன் கூடிய வினாத்தாள் தயாரித்து விலையில்லாமல் வழங்கி வந்தனர். 

தற்போது மாணவர்கள் வினாத்தாள் கட்டணம் ரூ.15 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடைத் தாள்களை தனியாக மாணவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் விலையில்லாக் கல்வி என்று அரசு செயல்படுத்தி வரும்நிலையில் தேர்வு வினாத்தாள் கட்டணம் வசூலிப்பது முரண்பாடாக உள்ளது. 

ஏழை, எளிய மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மாணவர்களுக்கு விலையில்லாது காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவ- மாணவிகளிடம் கட்டண வசூலித்து 4 முதல் 8-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வினை நீட் தேர்வு போன்று நடத்த வேண்டுமா? இது தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற திட்டத்தின்படி தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தின் முன்னோட்டமா? என்ற அச்சம் ஏற்படுகிறது. 

எனவே கட்டணத்துடன் கூடிய வினாத்தாள் என்ற நடைமுறையினை கைவிட்டு, விலையில்லா வினாத்தாள்களை பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து வழங்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் தலையிட்டு பள்ளிக்கல்வித்துறையில் மறைமுகமாக தேசிய கல்விக் கொள்கையினை செயல்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்.  விலையில்லாமல் வினாத்தாள்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் மீது பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in