காலியாக இருக்கும் பணியிடங்கள்; ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம்: அரசுக்கு எதிராக பொங்கும் சங்கம்

காலியாக இருக்கும் பணியிடங்கள்; ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம்: அரசுக்கு எதிராக பொங்கும் சங்கம்

காரைக்காலில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை  பணியிடமாற்றம் செய்து புதுச்சேரி  அரசு பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காரைக்கால் பகுதி பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இந்த பணியிட மாறுதல் காரைக்கால் மாவட்டத்தில் கல்விப் பணியை பாதிக்கும் என்று இது குறித்து காரைக்கால் பிரதேச  அரசு ஊழியர் சம்மேளனம்  சார்பில் புதுச்சேரி அரசுக்கு  கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

'புதுச்சேரி மாநில கல்வி கூடங்களில் பணியாற்றி வரும் 214 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நேற்று பணியிட மாற்றல் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு 90 ஆசிரியர்களும், காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு 124 ஆசிரியர்களும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, காரைக்காலில் ஏறக்குறைய 40 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் ஆணையில் 124 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதன் மூலம்  34 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்று ஆசிரியர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது  வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. 

இச்செயல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆகவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதலை கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதுச்சேரியிலிருந்து வரும் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகே காரைக்கால் பகுதி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். மேலும், காரைக்காலில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in