கடலூர் மாவட்டத்தில் ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்: காரணம் என்ன?

கடலூர் மாவட்டத்தில் ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்: காரணம் என்ன?

ஆன்லைன் நடைமுறையில் உள்ள சிக்கல் காரணமாக  கடலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாத  ஊதியம் இதுவரையிலும்  கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் சம்பளப் பட்டியல்கள் தயாரித்து மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று அந்தந்த சார்நிலைக் கருவூலங்கள் மூலம் ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக IFHRMS எனப்படும் (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம்) என்ற ஆன்லைன் முறையில் சம்பளம் பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி  கல்வி மாவட்ட அளவில் இயங்கி வந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவாய் மாவட்ட அளவில் கல்வி அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியது. இந்த மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், கருவூலங்கள் ஆகியவற்றின் குறியீடு எண்கள் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஆசிரியர்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடையாததால் அக்டோபர் மாத ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே கல்வித்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு சிக்கலுக்கு தீர்வு கண்டு அக்டோபர் மாத ஊதியத்தை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in