ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர்
கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர்

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று ஈடு செய்யும் விடுப்பு அறிவித்துவிட்டு அதை இரவு 9 மணிக்கு மேல் ரத்துசெய்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரி கரையோர மாவட்டங்களில் பாரம்பரிய திருவிழாவான ஆடிப்பெருக்கை கொண்டாடும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை கடந்தாண்டு விடப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளூர் விடுமுறை பற்றி எந்த அறிவிப்பும் வராததால் பல பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி ஈடு செய்யும் விடுப்பாக கடிதம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை உள்ளூர் விடுமுறை என கரூர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கும் உள்ளூர் விடுமுறை என தகவல் வழங்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று இரவு 9 மணிக்குமேல் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் புதன்கிழமை வழக்கம்போல் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் கண்டனத்தை எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், "அண்டை மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்ட நிலையில் காவிரி கரையில் அமைந்திருக்கும் கரூர் மாவட்ட ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி ஈடு செய்யும் விடுப்பாக விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் மாவட்ட ஆட்சியருக்கு ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை.

உள்ளூர் விடுமுறையை ரத்து செய்வதாக இரவு 9 மணிக்கு மேல் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்களுக்கு ஏற்கெனவே விடுமுறை என தகவல் வழங்கிய பின்னர் மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொன்னால் எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பதை ஆட்சியர் உணர மாட்டாரா?

ஆசிரியர்கள் என்றால் ஒரு இளக்காரமான மனநிலையில் அணுகும் மாவட்ட ஆட்சியரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உள்ளூர் விடுமுறை விடப்பட்டு அதனை ஈடு செய்வதற்காக வரும் சனிக்கிழமை அல்லது வேறொரு வாரத்தில் சனிக்கிழமையில் பள்ளிக்கூடம் செயல்பட்டால் என்ன குறைந்து விடப் போகிறது எனத் தெரியவில்லை.

இதற்கு முன்பாக கல்வித்துறை சார்ந்த சில பிரச்சினைகளை கையாண்ட விதத்தில் ஏற்கேனவே மாவட்ட ஆட்சியருக்கு அவப்பெயர் இருக்கும் சூழலில், உள்ளூர் விடுமுறையை ரத்து செய்து இரவு 9 மணிக்கு மேல் உத்தரவிட்ட நிகழ்வு ஆசிரியர்கள் மத்தியில் மேலும் அவருடைய மதிப்பை குறைக்கும் செயலாக இருக்கிறது. எங்களின் நியாயமான அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட இடம் கொடுக்காத மாவட்ட ஆட்சியரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று ஆத்திரத்தோடு செல்கிறார்கள்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் தரப்பில், 'காவிரியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டால் மாணவர்கள் ஆற்றங்கரைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகத்தை குறை சொல்வார்கள். அதனால்தான் மாணவர்கள் ஆற்றுக்கு செல்வதை தடுக்கும் விதமாக இன்று பள்ளி உண்டு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அதன் காரணம் தெரியாமல் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என்று சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in