அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரியாக கத்திக்குத்து: சீருடை அணியாத 3 மாணவர்கள் வெறிச்செயல்

அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரியாக கத்திக்குத்து: சீருடை அணியாத 3  மாணவர்கள்  வெறிச்செயல்

சீருடை அணியாததைக் கண்டித்த அரசு பள்ளி ஆசிரியரை வீட்டுக்குச் செல்லும் வழியில் வழிமறித்து மூன்று மாணவர்கள் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் இந்திரபுரியில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் பூதேவ்(29). பள்ளியில் நேற்று தேர்வு நடைபெற்றது. அப்போது சில மாணவர்கள் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்திருந்தனர். அதைக் கவனித்த ஆசிரியர் பூதேவ், அந்த மாணவர்களை அழைத்துக் கண்டித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி முடிந்து அந்த பூதேவ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் மூவர் வழிமறித்து கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இதில் ஆசிரியரின் வயிற்றில் ஒரு மாணவன் கத்தியால் குத்தியதில் அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவ்வழியாகச் சென்றவர்கள், உடனடியாக ஆசிரியரை மீட்டு டெல்லியில் உள்ள பி.எல்.கபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், மூன்று மாணவர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஆசிரியரை கத்தியால் வயிற்றில் குத்திய மாணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை டிசிபி(மேற்கு) பன்சால் கூறுகையில், "சீருடை அணியாததால் மாணவர்களை ஆசிரியர் பூதேவ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று மாணவர்கள் அவரைக் கத்தியால் குத்தியுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மாணவர்களைத் தேடி வருகிறோம்" என்றார். பள்ளி ஆசிரியரை மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in