எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியை அசத்தல் நடனம்: வைரல் வீடியோ

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியை அசத்தல் நடனம்: வைரல் வீடியோ

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியை ஒருவர் நடனம் ஆடும் வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பல்வேறு சிக்கலைச் சந்தித்தனர். இதனால் ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் அதிக நாள்கள் கல்வி பயிலவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே போதிய அளவில் எழுத படிக்க பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவா்களும் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும், எழுத்தும்' என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சிகள் நடைபெற்றது.

இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு இதற்கான கையேடு, பாடப்புத்தகம் வடிவமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் தயார் நிலையில் உள்ளன.

இதனிடையே, எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியை ஒருவர் அசத்தலாக நடனம் ஆடும் வீடியோவை தமிழக பள்ளிகல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in