வகுப்பறையில் தாக்கிய ஆசிரியர்; கோமாவிற்கு சென்ற மாணவி மரணம்: வீட்டுப்பாடத்தால் நடந்த கொடூரம்

சம்பவம் நடந்த தனியார் பள்ளி.
சம்பவம் நடந்த தனியார் பள்ளி.

வீட்டுப்பாடம் செய்யாததால் 2-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் தலையில் ஸ்கேலால் தாக்கினார். இதனால் தலையில் ரத்தம் உறைந்து கோமா நிலைக்குச் சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் என்ஆர்ஐ காலனியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பாத்திமா (7) என்ற மாணவி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி வீட்டுப்பாடம் செய்து வரவில்லையென்று கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவிக்கு ஆசிரியர் பல்வேறு தண்டனை வழங்கியுள்ளார்.

புத்தகங்களைத் தோளில் சுமந்தபடி மாணவி வகுப்பறையைச் சுற்றி வரச்செய்துள்ளார். அத்துடன் மாணவியின் தலையில் ஸ்கேலால் அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பாத்திமா மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர், மாணவியை நிஜாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும், மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினர்,

இதையடுத்து மாணவி பாத்திமா மேல்சிகிச்சைக்காக ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவி பாத்திமா உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும ஆசிரியர் மீது பாத்திமாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த நிஜாமாபாத் மண்டல கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்தனர். மாணவியை தாக்கிய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஆசிரியர் தாக்கிய மாணவி உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in