ஆவின் பால் விலை உயர்வால் டீ, காபி விலை உயர்வு

ஆவின் பால் விலை உயர்வால் டீ, காபி விலை உயர்வு

ஆவின் பால் விலையேற்றம், மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக டீ, காபி உள்ளிட்ட பானங்களில் விலை உயர்ந்துள்ளது.

'வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்' என்றார் ஔவையார். அதுபோல ஒரு பொருளின் விலை உயர்வு மற்ற பொருள்களின் விலையையும் பாதிப்படையச் செய்கிறது. ஜிஎஸ்டி, மூலப் பொருள்களின் விலையேற்றம் என பல்வேறு காரணங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் டீ தூள், காபித் தூள், சர்க்கரை, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதனால் சாமானியர்கள் குடிக்கும் டீயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் கடந்த 3-ம் தேதி அறிவித்தது. அதேவேளையில் 5-ம் தேதி முதல் ஆவினில் விற்கப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலையை அதிரடியாக 12 ரூபாய்  அளவிற்கு ஆவின் நிர்வாகம் உயர்த்தியது. இதன் மூலம் ஆவினில் விற்கப்படும் ஆரஞ்சு நிற,   நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தப்பட்டு 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதுபோல் பால் பொருட்களின் விலைகளும் நாளுக்குநாள் ஏற்றமடைந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சாமானியர்கள் அருந்தும் டீ மற்றும் காபியின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோர டீக்கடைகளில் 10 முதல் 12 ரூபாய் வரை டீ விற்பனை செய்யப்படுகிறது. கடுமையான பால் விலை உயர்வு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஒரு கிளாஸ் டீயின் விலை 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் 15 ரூபாயாக இருந்த காபியின் விலை 20 ரூபாயாக மதுரையில் உயர்த்தப்பட்டுள்ளது. படிப்படியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் டீ, காபி விலைகள் உயர்த்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in