வரி ஏய்ப்பு புகார்: பிரபல கொரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் அதிரடி ரெய்டு

வரி ஏய்ப்பு புகார்: பிரபல கொரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் அதிரடி ரெய்டு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பிரபல கொரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புரொபஷனல் கொரியர் என்ற தனியார் நிறுவனம், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் துபாய்,சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3300 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அகமது மீரான், சேக் மொய்தீன் உள்ளிட்ட 5 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும், பதிவு அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டைலும்ல் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிண்டி, மண்ணடி, கோயம்பேடு உள்ளிட்ட ஆறு இடங்களிலும் தமிழகம் முழுவதும் 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் கொரியர் மூலம் தகவல் தொடர்பு மற்றும் பொருட்கள் பரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு வியாபாரம் அதிகரித்த நிலையில் முறையான கணக்கு காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் வரிஏய்ப்பு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நிறுவனத்தின் நேரடி விற்பனையைத் தவிர்த்து பிரான்சைஸ் என்று சொல்லக்கூடிய ஏஜெண்டுகள் மூலமாக அதிக அளவில் கொரியர் அலுவலங்கள் அமைத்து சேவை வழங்கியதும், அவ்வாறு பிரான்சைஸ் அடிப்படையில் ஈட்டப்பட்ட வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. சட்டவிரோதமாக கொரியர்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தமிழக போலீஸார், அண்மையில் கண்டுபிடித்து அது தொடர்பாக அனைத்து கொரியர் நிறுவனங்களையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதன் அதன் அடிப்படையில் இது போன்ற சட்ட விரோத செயல்களில் கொரியர் நிறுவனம் ஈடுபட்டு பணம் ஈட்டியுள்ளதா, ஹவாலா பண பரிமாற்றம் கொரியர் மூலம் நடைபெற்றுள்ளதா கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை முடிந்த பின்பே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் நகை குறித்து தகவல் வெளியாகும் என வருமானவரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in