டெல்லியில் இந்த ஆண்டு 3.75 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளான இன்று டெல்லியில் அம்பேத்கர் சிறப்பு பள்ளிகளை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திறந்து வைத்தார். இவ்விழாவில் அவர் பேசுகையில், " கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை அம்பேத்கர் தந்தார். டெல்லியில் உள்ள அனைத்து சிறப்பு பள்ளிகளும் இனி ‛அம்பேத்கர் சிறப்பு பள்ளி' என்று அழைக்கப்படும். நமது சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரைச் சூட்டுவதே, நாம் அவருக்கு மரியாதை செலுத்தும் சிறந்த வழியாகும்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆண்டு டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 3.75 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது அரசியலில் பள்ளிகள் பற்றி பேசப்படுவது நல்ல விஷயம்தான். எதிர்க்கட்சி தலைவர்கள் பள்ளிகளுக்குச் சென்று, அங்கு குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.