நீர்வளம் பெருக்குவதில் முனைப்பு காட்டும் டாடா நிறுவனம்

நீர்வளம் பெருக்குவதில் முனைப்பு காட்டும் டாடா நிறுவனம்

இந்தியாவில் செயல்படும் சில தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செய்யும் செயல்கள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் அரசுத் துறை நிறுவனங்களுக்கும் முன்னோடிகளாகவே பல தருணங்களில் அமைகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இயங்கிவரும் டாடா ஸ்டீல் நிறுவனம் சுற்றுச்சூழல் காப்பு, நீர்வளப் பெருக்கு, மழை நீர் சேகரிப்பு, வன வள வளர்ப்பு, மீனள அதிகரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் காப்பு ஆகிய அனைத்தையும் தன்னுடைய ஆலை வளாகத்தில் உள்ள இடங்களிலும் வெளியிலும் செய்துகாட்டி வருகிறது.

டாடா நிறுவனத்தின் குளிர் உருட்டாலை அமைந்துள்ள ஜாம்ஷெட்பூரின் வட கிழக்குப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகச் சரிந்திருந்தது. இதன் விளைவாகக் குடிநீருக்கு மக்கள் வெகு தொலைவு செல்ல வேண்டியிருந்தது. அங்கே பறவையினங்களும் கால்நடைகளும்கூட குடிக்க நீரில்லாமல் வாடின. இந்த நிலையில்தான் டாடா நிறுவனம் 2019 முதல் திட்டமிட்டு மேற்கொண்ட வேலைகளால் அந்த ஆலையைச் சுற்றியும் ஆலை வளாகத்திலும் மிகப் பெரியதாக 5 நீர்நிலைகள் உருவாகிவிட்டன. நீர்நிலைகளுடன் நிறுவனம் நட்டுவைத்த 6,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் செழித்து வளர்கின்றன.

ஜாம்ஷெட்பூர் டாடா ஸ்டீல் நிறுவனம்
ஜாம்ஷெட்பூர் டாடா ஸ்டீல் நிறுவனம்

அத்துடன் காய்ந்து கட்டாந்தரையாக இருந்த இடம் பசுமைபூத்த புல்வெளியாகி கால்நடைகளுக்கு வயிறார தீனி தருகிறது. ஏற்கெனவே அப்பகுதிகளில் வளர்ந்திருந்த மரங்கள் பச்சை கட்டி பூத்தும் காய்த்தும் ஏராளமான பறவைகள் வந்து தங்கவும் இனப் பெருக்கம் செய்யவும் இடம் அளிக்கின்றன. நீர்நிலைகளில் மீன்களும் நண்டுகளும் பெருகியுள்ளன. இதனால் வலசை போகும் பறவைகளும் நகரைச் சுற்றிய வனப்பகுதி பறவைகளும் மீன்களையும் நண்டுகளையும் உண்டு பல்கிப் பெருகுகின்றன.

2019-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனம் நகரில் கிட்டத்தட்ட வற்றிவிட்ட நீர்நிலைகளைப் பார்வையிட்டு அவற்றை மீண்டும் நீர் நிரம்பிய நீர்நிலைகளாக மாற்ற நீரியியல் துறை நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை செய்து அதன்படி செயல்படத் தொடங்கியது. மழை பெய்யும்போது தரையில் விழுந்து வழிந்தோடும் நீரைச் சேமிப்பது, மழை நீரையே ஆங்காங்கே பள்ளமான இடங்களில் தேக்குவது என்று திட்டமிட்டு வேலை செய்தனர். மிகப் பெரிய பரப்பில் விழும் மழைத்தண்ணீர் முழுவதும் அதன் போக்கிலேயே அதிகம் சேரும் இடம் அடையாளம் காணப்பட்டு அங்கே குளங்கள், குட்டைகள், சிறிய ஏரிகள் உருவாக்கப்பட்டன. அந்த நீர் வற்றிவிடாமல் இருக்க அருகில் பசுஞ்செடிகள், மரக் கன்றுகள் நடப்பட்டு வெப்ப வீச்சு குறைக்கப்பட்டது.

இப்படி நீர் சேமிப்புக்காக மட்டும் 32 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் உருவாக்கிய ஐந்தாவது நீர்நிலையில் மட்டும் 2.2 கோடி லிட்டர் தண்ணீர் இருப்பில் உள்ளது. இந்த நீர் சேமிப்பு நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதால் ஆங்காங்கே கிணறு தோண்டுகிறவர்களுக்கு ஊற்று சுரக்கிறது. அத்துடன் சுற்று வட்டாரங்களில் உள்ள மரங்கள் வேர்கள் மூலம் நீரை ஈர்த்து பசுமை கட்டுகின்றன. 6,000-க்கும் மேற்பட்ட மரங்கள் புதிதாக நடப்பட்டுள்ளன. இவற்றின் பூ, காய், பழம், இலை, பட்டை அனைத்துமே சமுதாயப் பயன்பாட்டுக்கு உரியவை. மரங்களில் கூடுகட்டி முட்டையிடப் பறவையினங்கள் வருகின்றன. நீர் நிலைகளிலிருந்து அவற்றுக்குத் தேவையான மீன், நண்டு, நத்தை போன்ற உணவுகள் கிடைக்கின்றன.

14 ஏக்கர் பரப்பில் கடைசியாக உருவாக்கப்பட்ட சிஆர்எம் பாரா நீர்நிலையானது ஓராண்டுக்குள் முழுமை பெற்று நீர்வளத்தை நிறையச் சேமித்து இதில் ஈடுபட்ட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நகரைச் சுற்றி எங்காவது நிலம் காய்ந்து கிடந்தால், அது அப்படித்தான் இருக்கும் என்று விட்டுவிடாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எல்லா இடங்களிலும் நீர்நிலைகளை உருவாக்கி தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்பதற்கு ஜாம்ஷெட்பூரின் புதிய நீர்நிலைகளே சாட்சி.

இந்த நிறுவனம் மழை நீரைச் சேமிப்பதுடன் ஆலையிலேயே பயன்படுத்தப்படும் தண்ணீரைக் கழிவுகள், ரசாயனங்கள் நீக்கி சுத்தப்படுத்தி மரங்களை வளர்க்கப் பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் நகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் தன் பொறுப்பில் ஏற்று செம்மையாக நிர்வகித்து அதிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. ஆலைகளிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பதால் ஆறுகள் போன்ற நீர் நிலைகளும் அசுத்தம் அடையாமல் தப்பிக்கின்றன. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய நல்ல உதாரணம் இது.

தமிழ்நாட்டில் ஓசூரில் டிவிஎஸ் நிறுவனம் இதே போல சமூகப் பொறுப்புணர்வோடு தனது ஆலை வளாகத்திலேயே மிகப் பெரிய இயற்கை வனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது நீர்வளத்தைப் பெருக்கியிருப்பதுடன் பறவைகள், பூச்சிகள், வன விலங்குகள், பட்டாம்பூச்சிகள் என்று அனைத்தையுமே பெருக்கியிருக்கிறது. இதையே புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநகராட்சிகளும் நகராட்சிகளும் பேரூராட்சிகளும் மேற்கொண்டால் தமிழ்நாட்டிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும், தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். உவர் நீராக இருக்கும் இடங்களில்கூட தண்ணீர் சுவையுள்ள குடிநீராகும். இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in