ஓசி சரக்கு கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு: தரமறுத்த ஊழியர்களை சரமாரியாக தாக்கிய கஞ்சா ஆசாமிகள்

ஓசி சரக்கு கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு: தரமறுத்த ஊழியர்களை சரமாரியாக தாக்கிய கஞ்சா ஆசாமிகள்

காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் பார் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துவருகிறது. காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து பலரைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருந்தாலும் போதைத் தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறையவில்லை. குறிப்பாக 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க இளைஞர்கள் பெருமளவில் டாஸ்மாக் கடை முன்பு கூடியிருந்தனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம், சித்திரகுப்தர் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கஞ்சா போதையில் சென்ற சில இளைஞர்கள் அங்கிருந்த விற்பனையாளரிடம் இலவசமாக மதுபானம் கேட்டனர்.

ஆனால், இலவசமாக விற்பனையாளர்கள் தர மறுத்ததால் மறுத்ததால் இருதரப்பினருக்குத் தகராறு ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த வாலிபர்கள் கடையின் விற்பனையாளர்களான சுந்தர வடிவேல் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை தாக்கத் தொடங்கினர். இதைத் தடுக்க முயன்ற பார் ஊழியர்களும், போதை இளைஞர்களும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். சண்டையில் காயமடைந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர்களும், பார் ஊழியர்களும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் போதை இளைஞர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in