பொங்கல் கோலாகலம்: அடேயப்பா, 4 நாட்களில் 1,000 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் கோலாகலம்: அடேயப்பா, 4 நாட்களில் 1,000 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.13-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரையிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் மது விற்பனை  ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. முந்தைய பண்டிகை தினத்தின்போது நடைபெற்ற விற்பனையை முறியடிக்கும் விதமாக ஒவ்வொரு பண்டிகையிலும் மது  விற்பனை மேலும் கூடுகிறது.

அந்த வகையில் கடந்த தீபாவளி பண்டிகையை விட மிக அதிகளவாக பொங்கல் பண்டிகையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மது விற்பனையை சாதனையாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்று பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய நிலையில் இந்த முறை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

ஆனாலும் மது விற்பனை குறித்த அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது . அதன்படி கடந்த ஜன.13-ம் தேதியன்று  ரூ.150 கோடி அளவிலும், 14-ம் தேதியன்று  ரூ.250 கோடி அளவிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி 16- ம்  தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை, பெரும் பொங்கல் தினத்தன்று மட்டும்   ரூ.450 கோடிக்கு மதுபானங்களை மது பிரியர்கள் அள்ளிச் சென்று குடித்து தீர்த்திருக்கின்றனர்.

இந்த மூன்று  3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ள நிலையில்  காணும் பொங்கல் அன்று 300 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.  இதனால் இந்த  பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக்  மது விற்பனை ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை கிராமப்புறங்களில் அதிக அளவில் மது விற்பனை நடந்ததாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் நகரப் பகுதியில் உள்ளவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட  தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கிராமப்புறங்களில் மது விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in