இணையத்தில் இரண்டாம் நாளாக எதிரொலிக்கும் ‘தமிழ்நாடு’ முழக்கம்!

இணையத்தில் இரண்டாம் நாளாக எதிரொலிக்கும் ‘தமிழ்நாடு’ முழக்கம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு எதிராக தொடங்கிய ’தமிழ்நாடு’ முழக்கம் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் இணையத்தை ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர், “தமிழ்நாடு என்று அழைப்பதைவிட தமிழகம் என்பதே பொருத்தமாக இருக்கும்” என்று தனது கருத்தை வெளியிட்டார். இதனையடுத்து, ஆளுநரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் விவாதங்கள் களைகட்டின.

’தமிழ்நாடு என்பதில் உள்ள ’நாடு’ என்பது பிரிவினையை குறிக்கிறது. எனவே, தமிழகம் என்ற் அழைக்க வேண்டும்’ என ஆளுநருக்கு கருத்துக்கு ஆதரவானவர்கள் வாதிட்டனர். அதற்கு ’தமிழ்நாடு என்பது வெறும் பெயரல்ல; நிலம், மொழி, பண்பாடு, அரசியல் உள்ளிட்ட தனித்துவ அடையாளங்களின் தொகுப்பு’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாதங்களை முன்வைத்து, ஆளுநர் கருத்துக்கு எதிரானவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தங்களுடைய பதிவுகளை ’#தமிழ்நாடு’ என்று டிரெண்டிங்கில் கலக்கச் செய்தனர்.

இதனால் இந்திய அளவில் #தமிழ்நாடு முன்னிலை பெற்றது. இரண்டாம் நாளாக இன்றும் அந்த இடத்தை தக்க வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழரின் சிறப்புகளை பட்டியலிடும் பதிவுகள் அணி வகுத்து வருகின்றன. தமிழர் சிறப்புக்கான ஆடை, அலங்காரம், கட்டிக்கலை, பாரம்பரையம், சிற்பம் உள்ளிட்டவையும் இவற்றில் இடம்பெற்று வருகின்றன. தமிழ்நாடு முழக்கத்தை கைகளில் மருதாணி இட்டும் பெண்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அதற்கான வாழ்த்துப் பகிர்வின் அங்கமாக இவ்வாறு தமிழர் மற்றும் தமிழ்நாட்டுச் சிறப்புகள் இடம்பெறுவது உண்டு. ஆனால், ஆளுநர் தயவால், பொங்கலுக்கு ஒருவாரம் முன்பே தமிழ்நாட்டில் தமிழ்நாடு முழக்கம் எழுந்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கும் தமிழர்களும் இணைந்துகொண்டதில் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது ‘தமிழ்நாடு’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in