விழுந்து விழுந்து வேலை செய்தால் அது செய்தியாகாது, தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது: ஆளுநர் தமிழிசை ஆதங்கம்

செங்கல்பட்டு நிகழ்ச்சியில் தமிழிசை
செங்கல்பட்டு நிகழ்ச்சியில் தமிழிசை

``விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை. ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள்'' என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நேற்று இரவு  நடைபெற்ற அரிமா சங்கத்தின் மதுரை மண்டல மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், நேற்று காலை  நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார். செங்கல்பட்டு மாவட்டத்தில்  அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்  தரை விரிப்பில் கால் தடுக்கி  கீழே விழுந்தார்.  அது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.  இதனை குறிப்பிட்டு அங்கு அவர் பேசினார்.

'ஒரு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டபோது கால் இடறி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் அதை பெரிய செய்தியாக வெளியிட்டதால் என்னிடம் பலரும் நலம் விசாரிக்கிறார்கள்‌. நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது‌‌.‌ ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது' என தெரிவித்தார்.

தெலங்கானாவில் லேப்டாப் வேண்டும் என்று கேட்ட ஒரு மாணவருக்கு தான் ஒரு லேப்டாப் வாங்கிக் கொடுத்ததாக கூறியவர்,  வீட்டில் பயன்படக்கூடிய, அதேநேரத்தில் பயன்படுத்தாத லேப்டாப்கள் இருந்தால் அவற்றை தெலங்கானாவில் கொண்டு வந்து தன்னிடம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆளுநராக இருப்பதால் இதுபோன்ற நன்மைகளை செய்ய வாய்ப்பு கிடைப்பதாகவும், இதுபோன்ற சேவையை செய்ய ஆரம்பித்தால் மனதிற்கு கிடைக்கும் நிம்மதி அதிகமானது என்றும் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in