ஒட்டகம் மேய்க்க மறுப்பு; குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: கதறும் மனைவி, பிள்ளைகள்!

ஒட்டகம் மேய்க்க மறுப்பு; குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: கதறும் மனைவி, பிள்ளைகள்!

குவைத்தில் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த முத்துக்குமரன், தன்னுடைய குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால், வெளிநாடு சென்று குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்தார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் மூலம் குவைத் செல்ல முடிவு செய்தார் முத்துக்குமரன். இதனால், 1.5 லட்சம் கடன் வாங்கி குவைத் சென்றுவிட்டார் முத்துக்குமரன்.

முத்துக்குமரனின் மனைவி, குழந்தை
முத்துக்குமரனின் மனைவி, குழந்தை

இந்நிலையில், குவைத்தில் ஒட்டகம் மேய்க்க சொல்வதாகவும், அந்த வேலை தனக்குப் பிடிக்கவில்லை ஊர் திரும்பிவிடுகிறேன் என்றும் தனது மனைவிடம் அண்மையில் கூறியுள்ளார் முத்துக்குமரன். இதைத் தொடர்ந்து, முத்துக்குமரனின் செல்போன் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. மனைவியால் கணவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில், முத்துக்குமரன் இறந்துவிட்டதாக மனைவி வித்யாவுக்கு தகவல் வந்திருக்கிறது. இதனால் குடும்பமே நிலைகுலைந்து போனது. கணவர் எப்படி இருந்தார் என்பது தெரியாமல் தவித்துவந்த மனைவிக்கு, தலையில் இடி விழுந்தது போல், கணவர் சுட்டுக்கொல்லப்பட்டது செய்தி தெரியவந்தது. குமாஸ்தா வேலைக்கு சென்ற முத்துக்குமரனுக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. இதனால், அங்குள்ள ஒருவரின் வீட்டில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் முத்துக்குமரன். அப்போது, தனது ஒட்டகத்தை மேய்க்கும்படி அந்த நபர் கூறியுள்ளார். இதற்கு மறுத்துள்ளார் முத்துக்குமரன். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர், முத்துக்குமரனை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த தகவல் குவைத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.

இதனிடையே, தனது கணவரின் உடலை மீட்க வேண்டும் என்று கோரி திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் முத்துக் குமரனின் மனைவி வித்யா மனு கொடுத்துள்ளார். அவரது உடலை தமிழகம் கொண்டு வர கலெக்டர் உறுதி அளித்துள்ளார். அதன்படி முத்துக்குமரனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in